நேற்றைய லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி.

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்றைய லீக் போட்டியில் கோலி சதம் விளாச, 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பவுலிங், பேட்டிங்கில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியதால், போட்டியில் வழக்கமான பரபரப்பு காணப்படவில்லை.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கின்றன. துபாயில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் பகர் ஜமானுக்கு பதில் இமாம்-உல்-ஹக் இடம் பெற்றார். ‘டாஸ்’ வென்ற கேப்டன் முகமது ரிஸ்வான், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆசம், இமாம்-உல்-ஹக் நிதான துவக்கம் தந்தனர். முதல் ஓவரில் ஷமி, 5 ‘வைடு’கள் வீச, 6 ரன் கிடைத்தன. 5வது ஓவரை வீசிய ஷமிக்கு வலது கணுக்காலில் வலி ஏற்பட, வெளியேறினார். இதே போல வெப்பத்தின் தாக்கம் காரணமாக ரோகித்தும் வெளியேறினார். இருவரும் சிறிது நேரத்தில் களத்திற்கு திரும்பினர்.
8வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது பந்தில் பாபர் (23) வீழ்ந்தார். அக்சர் நேரடி ‘த்ரோ’வில் இமாம் (10) ரன் அவுட்டானார். 10 ஓவரில் பாகிஸ்தான் 52/2 ரன் எடுத்தது.
பின் கேப்டன் ரிஸ்வான், சவுத் ஷகீல் பொறுப்பாக ஆடினர். இவர்கள 3வது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்த நிலையில், அக்சர் படேல் ‘செக்’ வைத்தார். இவரது ‘சுழலில்’ ரிஸ்வான் (46) போல்டானார். ஹர்திக் பாண்ட்யா பந்தில் ஷகீல் (62) அவுட்டானார். ஜடேஜா வலையில் தயாப் தாஹிர் (4) போல்டானார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 33.1 ஓவரில் 151/2 என வலுவாக இருந்தது. அப்போது 300 ரன் எட்ட வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்திய பவுலர்கள் பிடியை இறுக்க, 34.5 ஓவரில் 165/5 ரன் என சரிந்தது.
43வது ஓவரை வீசிய ‘ஸ்பின்னர்’ குல்தீப் இரட்டை ‘அடி’ கொடுத்தார். 3வது பந்தில் சல்மான் அகா (19) அவுட்டானார். 5வது பந்தில் ஷாகீன் ஷா அப்ரிதி (0) எல்.பி.டபிள்யு., ஆனார். 6வது பந்தை நசீம் ஷா தடுத்து ஆட, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. நசீம் ஷா (14) நிலைக்கவில்லை. ஷமி ஓவரில் குஷ்தில், ஹாரிஸ் ராப் தலா ஒரு சிக்சர் அடித்தனர். ஹாரிஸ் (8) ரன் அவுட்டானார். குஷ்தில் ஷா, 38 ரன் எடுத்தார். பாகிஸ்தன் அணி 49.4 ஓவரில் 241 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் குல்தீப் அதிபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் சூப்பர் துவக்கம் தந்தனர். நசீம் ஷா ஓவரில் ரோகித் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். ரோகித், 20 ரன்னுக்கு அவுட்டானார். ஷாகீன் ஷா அப்ரிதியை ஒருகை பார்த்த சுப்மன் பவுண்டரிகளாக அடித்தார். அப்ரார் அகமது சுழலில் சுப்மன்(46) போல்டானார். இந்தியா 18 ஓவரில் 102/2 ரன்னை எட்டியது.
பின் கோலி, ஸ்ரேயாஸ் அபாரமாக ஆடினர். நசீம் ஷா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோலி, அரைசதம் கடந்தார். மறுபக்கம் சல்மான் பந்தில் ஸ்ரேயாஸ் ஒரு இமாலய சிக்சர் (102 மீ., துாரம்) சிக்சர் விளாசினார். அரைசதம் கடந்த ஸ்ரேயாஸ், 56 ரன்னுக்கு குஷ்தில் பந்தில் இமாம்-உல்-ஹக்கின் சர்ச்சைக்குரிய ‘கேட்ச்சில்’ வெளியேறினார். ‘ரீப்ளே’யில் பந்து தரையில் பட்டது போல தெரிந்தது. ஹர்திக் பாண்ட்யா (8) நிலைக்கவில்லை.
42 ஓவரில் இந்தியா 238/4 ரன் எடுத்திருந்தது. அப்போது கோலி 95 ரன்னில் இருந்தார். வெற்றிக்கு 4 ரன், கோலி சதத்திற்கு 5 ரன் தேவை என்ற சுவாரஸ்ய நிலை ஏற்பட்டது. குஷ்தில் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்த கோலி 96 ரன்னை எட்டினார். அடுத்த பந்தில் அக்சர் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் ஒரு கலக்கல் பவுண்டரி அடித்த கோலி, ஒருநாள் அரங்கில் 51வது சதம் எட்டினார். இந்திய அணி 42.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 244 ரன் எடுத்து சுலப வெற்றி பெற்றது. கோலி(100, 7 பவுண்டரி), அக்சர் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
வங்கதேசம், பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, ‘ஏ’ பிரிவில் இருந்து முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. நியூசிலாந்து, இந்தியாவிடம் வீழ்ந்த பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு சற்று குறைந்தது.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற அரிய வாய்ப்பு உள்ளது. நியூசிலாந்து அணி, வங்கதேசம் (பிப். 24), இந்தியாவிடம் (மார்ச் 2) மோசமாக தோற்க வேண்டும்.
வங்கதேசத்துக்கு எதிராக (பிப். 27) பாகிஸ்தான் அணி இமாலய வெற்றி பெற வேண்டும். அப்போது நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் தலா 2 புள்ளிகளுடன் சமநிலை பெறும். ‘ரன்-ரேட்’ அடிப்படையில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறலாம்.