கொலை வழக்கில் 22 ஆண்டுகளுக்குப் பின் 12 பேருக்கு ஆயுள் தண்டனை!

உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 58 வயது நபரைக் கொலை செய்தவர்களுக்கு 22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் உள்ள லாதுர் மாவட்டத்தின் குர்தால் கிராமத்தில் வசித்தவர் திகம்பர் பாட்டீல் (58). சமூக செயற்பாட்டாளரான இவருக்கும் அந்தப் பகுதியச் சேர்ந்த சிலருக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்தது.
இந்த நிலையில், 2003 ஆம் ஆண்டு மே 23 அன்று அவரது வீட்டின் வெளியே 13 பேர் இணைந்து கட்டையால் தாக்கி, அவரின் குடும்பத்தினரையும் அடித்துள்ளனர்.
தாக்குதலில் பாட்டீல் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் அவரைக் கொலை செய்ததாகக் கூறி 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் ஒருவர் வழக்கு விசாரணையின்போது இறந்துவிட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.
மாவட்ட நீதிமன்றம் மற்றும் கூடுதல் அமர்வு நீதிபதி குற்றவாளிகள் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
22 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.