“அறியாமை இருள் அகன்று ஞான ஒளி வீசட்டும்”- மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி.

மகா சிவராத்திரி தினத்தில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியால் இதயங்களை ஒளிரச் செய்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வெளிப்படுத்த ஒன்றிணையுமாறு இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க செய்தி வெளியிட்டுள்ளார்.

அந்த செய்தி பின்வருமாறு:
உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யும் மங்களகரமான விழாவாக மகா சிவராத்திரி கருதப்படுகிறது.

சிவபெருமான் மற்றும் பார்வதியின் ஒன்றிணைவும், சிவபெருமான் தனது தெய்வீக நடனமான தாண்டவத்தை நிகழ்த்தும் தருணமும் இதில் நினைவுகூரப்படுகிறது. இது உலகம் மற்றும் வாழ்க்கையில் “அறியாமை இருளை வெல்வதை” குறிக்கிறது.

எனவே, ‘அறியாமை இருள் அகன்று ஞான ஒளி வீசட்டும்’ என்ற பிரார்த்தனையுடன், இந்து பக்தர்கள் இந்த நாளில் இரவு முழுவதும் விரதம் இருந்து புண்ணிய செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், வாழ்க்கையின் செழிப்பை பிரார்த்தனை செய்வதும் மகா சிவராத்திரி அன்று மேற்கொள்ளப்படுகிறது.

சிவன் மற்றும் பார்வதியின் ஒன்றிணைவு உணர்வு மற்றும் சக்தியின் ஒன்றிணைவு. இது, மூடப்பட்ட கண்களின் அறியாமை திரையை கிழித்து, யதார்த்த ஒளியில் கண்களைத் திறப்பதாகும். பல யுகங்களாக நம்மை சகோதரத்துவத்திலிருந்து விலக்கி, பிரிவினைகளை உருவாக்கிய நாகரிகமற்ற இருளின் திரையை கிழித்து, ஒற்றுமையுடன் இந்த பூமியில் ஒரு புதிய யுகத்தின் உதயத்தை அனுபவிக்கும் தருணம் இது.

வேறு எந்த காலத்தை விடவும் மத நல்லிணக்கத்தை மதித்து பாதுகாக்கும் அதே வேளையில், நாட்டின் ஒவ்வொரு சமூகமும் பரஸ்பர மரியாதை மற்றும் அன்புடன் நம் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கும் தருணம் இது.

அந்த வலுவான அடித்தளத்தில் நின்று, ஒரு நல்ல நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒரே தேசமாக ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். அனைவரும் விரும்பும் நல்ல அரசியல் கலாச்சாரம் கொண்ட வளமான நாட்டை உருவாக்க, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றில் பல புதிய மாற்றங்களுடன் நாம் தற்போது ஒரு மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிச் செல்கிறோம்.

மகா சிவராத்திரி தினத்தில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியால் இதயங்களை ஒளிரச் செய்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வெளிப்படுத்த ஒன்றிணையுமாறு இலங்கை வாழ் உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.

மகா சிவராத்திரி கொண்டாடும் இலங்கை இந்து பக்தர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களின் நல்ல எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேறி வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் என பிரார்த்திக்கிறேன்.

Leave A Reply

Your email address will not be published.