நான்கு பிணைக்கைதிகளின் சடலங்களை ஒப்படைத்த ஹமாஸ்; பாலஸ்தீனக் கைதிகள் விடுவிப்பு.

நான்கு இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. எகிப்திய சமரசப் பேச்சாளர்களின் உதவியோடு சடலங்களைப் பெற்றுக்கொண்ட இஸ்ரேல், 620 பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க இருக்கிறது.
இந்தக் கைதிகள் காஸாவில் அல்லது இஸ்ரேலில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள். இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஜனவரி 19ஆம் தேதி நடப்புக்கு வந்தது. இதன் முதல் கட்டம் அடுத்த வாரத்துடன் முடிவடைகிறது.
போர் நிறுத்தத்தின் அடுத்த கட்டம் குறித்து தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதுகுறித்த பரிந்துரைகள் முன்வைக்கப்படவில்லை என்று ஹமாஸ் கூறியது. பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க பிப்ரவரி 22ல் இஸ்ரேல் மறுப்பு தெரிவித்திருந்தது.
ஆறு இஸ்ரேலியப் பிணைக்கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைப்பதற்கு முன்பு, ஹமாஸ் அமைப்பு அவர்களையும் மாண்ட பிணைக்கைதிகளின் உடலன்களைக் கொண்ட சவப்பெட்டிகளையும் காஸாவில் கூடிய பெரும் கூட்டத்துக்கு முன் காட்சிப்பொருள்களைப் போல வைத்திருந்ததே இதற்குக் காரணம்.
இதற்கு இஸ்ரேலும் ஐக்கிய நாட்டு நிறுவனமும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், வியாழக்கிழமை (பிப்ரவரி 27) அதிகாலை, பிணைக்கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைத்தபோது அதுபோன்ற ஒரு ‘கண்காட்சி’ சடங்கை ஹமாஸ் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு உடல்களையும் இஸ்ரேல் பெற்றுக்கொண்டதாக அந்நாட்டுப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. சாச்சி இடான், இட்ஷாக் எல்கராட், ஒஹாட் யஹாலோமி, ஷ்லோமோ மன்ட்சூர் ஆகியோரின் உடல்கள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஹமாஸ் கூறியது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர். பலரைப் பிடித்துச் சென்று பிணைக்கைதிகளாக ஹமாஸ் அடைத்து வைத்தது.
இந்த நால்வரும் காஸா அருகில் வசித்து வந்ததாகவும் அவர்களது குடியிருப்புப் பகுதியிலிருந்து அவர்கள் பிடித்துச் செல்லப்பட்டதாகவும் ஹமாஸ் கூறியது.
உடல்களைப் பரிசோதித்து மாண்டோரை அடையாளம் காணும் பணிகளில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது.
அது நிறைவடைந்ததும் மாண்டோரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
காஸாவில் கிட்டத்தட்ட 30 இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் மாண்டுவிட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அவர்களில் சிலர் ஹமாஸ் போராளிகளால் கொல்லப்பட்டதாகவும் மற்றவர்கள் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் காரணமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இஸ்ரேல் விடுவிக்க இருக்கும் பாலஸ்தீனக் கைதிகளில் காஸாவில் கைது செய்யப்பட்ட 445 ஆண்களும் 24 பெண்களும் வயது குறைந்த இளையர்களும் 151 ஆயுள் தண்டனைக் கைதிகளும் அடங்குவர் என்று ஹமாஸ் தெரிவித்தது.
இந்த ஆயுள் தண்டனைக் கைதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்றும் அத்தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த 620 பாலஸ்தீனக் கைதிகளில் சிலர் விடுவிக்கப்பட்டுவிட்டதாக ஹமாஸ் கூறியது.
அவர்களை வரவேற்க நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் ரமலா நகரில் திரண்டனர்.
எஞ்சியுள்ள கைதிகள் எப்போது விடுவிக்கப்படுவர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.