போதைப் பொருள் கடத்தல்காரர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளிய பஞ்சாப் அரசு.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, பஞ்சாப் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தைப் பின்பற்றி கடத்தல்காரர்களின் வீடுகளை ‘புல்டோசர்’களால் இடித்து, தரைமட்டமாக்கி பஞ்சாப் அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் காவல்துறையினர் கடந்த வாரம் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஐந்து கிலோ எடை கொண்ட ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தக் கடத்தலில் அம்மாநிலத்தில் அதிக அளவில் போதைப்பொருள் புழக்கத்தில் உள்ளதாக நம்பப்படும் சோனு, ராகுல் ஹன்ஸ் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, இருவருக்கும் சொந்தமான பங்களா வீடுகளை புல்டோசர் மூலம் இடித்துத்தள்ள அரசு உத்தரவிட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தலில் ஆதிக்கம் செலுத்திய சோனு, சட்ட விரோதமாக கட்டிய பங்களாவை காவல்துறை இரு தினங்களுக்கு முன் இடித்துத் தள்ளியது.
இதேபோல், கடந்த 24ஆம் தேதி லுாதியானாவில் உள்ள ராகுல் ஹன்சின் வீடும் புல்டோசரால் இடிக்கப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக உத்தரப் பிரதேசம், ஹரியானா மாநில பாஜக அரசுகள் புல்டோசர் நடவடிக்கையை மேற்கொண்டபோது ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் மாநில அரசும் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.