காதலி உட்பட குடும்பத்தினர் 5 பேரை சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்!

கேரளாவில், 13 வயது தம்பி, பாட்டி, காதலி உட்பட ஐந்து பேரை, 23 வயது இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பெருமலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் அபான், 23. இவரது தந்தை ரஹீம், வெளிநாட்டில் வசிக்கிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், இவர் கடும் நிதி நெருக்கடியில் உள்ளார்.
இந்நிலையில், பாங்கோடு பகுதியில் உள்ள பாட்டி சல்மா பீவியின் வீட்டுக்கு சென்ற அபான், சுத்தியலால் அவரை அடித்துக் கொன்றார். தொடர்ந்து, எஸ்.என்.புரத்தில் உள்ள மாமா வீட்டுக்கு சென்ற அபான், மாமா லத்தீப், அத்தை ஷாஹிதா ஆகியோரை அடித்துக் கொன்றார்.
பெருமலாவில் உள்ள தன் வீட்டுக்கு வந்த அபான், ஒன்பதாம் வகுப்பு படித்த தம்பி அப்சான், 13, காதலி பர்சானா ஆகியோரை சுத்தியலால் அடித்துக் கொன்றார். அவர் தாக்கியதில், தாய் ஷெமி படுகாயம் அடைந்தார்.
இரண்டு மணி நேரத்தில் ஐந்து பேரை கொன்ற அபான், வெஞ்சாரமூடு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
அப்போது, தம்பி, பாட்டி, காதலி உட்பட ஐந்து பேரை கொன்றதாக அவர் கூறினார். மேலும், எலி மருந்து குடித்ததாகவும் அபான் கூறினார். இதையடுத்து, அவரை மருத்துவமனையில் பொலிஸார் சேர்த்தனர்.
அபான் தகவலின்படி சம்பவ இடங்களுக்கு சென்ற பொலிஸார், ஐந்து பேரின் உடல்களை மீட்டனர். உயிருக்கு போராடிய தாய் ஷெமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக அபானிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தையின் கடன்களை தீர்ப்பது தொடர்பாக குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், உறவினர்கள் உதவ மறுத்ததாகவும், இதனால், பாட்டி, மாமா, அத்தை உள்ளிட்ட ஐந்து பேரை அபான் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.