பயங்கரவாத தடைச் சட்டம் வெகு விரைவில் நீக்கப்படும்!

பயங்கரவாத தடைச் சட்டம் வெகு விரைவில் நீக்கப்படும், ஜனாதிபதி குழு அமைக்கப்படும், தேர்தல் வரை இழுத்தடிப்பு செய்யப்பட மாட்டாது நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவிப்பு
பயங்கரவாத தடைச்சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு உலக பயங்கரவாதம் மற்றும் உலகளாவிய நவீன சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை கோட்பாடுகளுக்கு அமைவாக புதிய சட்டம் உருவாக்கப்படும் என, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் தேர்தல் வரை அது இழுத்தடிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின், ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் சம்பந்தமில்லாத வகையில் உரையாற்றுகின்றார்கள். பொறுப்பற்ற வகையில் விமர்சனங்களை மாத்திரமே அவர்கள் முன்வைக்கின்றார்கள்.ஒருசிலர் மட்டுமே பொறுப்புடன் செயற்படுவது வரவேற்கத்தக்கது.
அரசாங்கமானது தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என அன்றும் குறிப்பிட்டோம்.இன்றும் குறிப்பிடு கின்றோம்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக கொண்டு வந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாம் எதிர்த்தோம்.
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஹர்ஷ குலரத்ன தலைமையில் குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எவ்வாறெனினும் இந்த நடவடிக்கைகள் அடுத்த தேர்தல் வரை இழுத்தடிப்புச் செய்யப்படமாட்டாது.
நடைமுறையிலுள்ள பயங்கர வாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்பதால், இவ்விடயத்தில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, பொலிஸ் மா அதி பருக்கும் பொலிஸ் ஆணைக்குழுவுக்குமிடையில் முரண்பாடு, சட்டமா அதிபருக்கும் ஜனாதிபதிக் குமிடையில் முரண்பாடு என தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்றும் வங்குரோத்து அரசியலில் ஈடுபடுகின்றன என்றும குறிப்பிட்டுள்ளார்.