விருப்பமில்லாத பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததுபோல பேசுகிறார்கள்- சீமான்

காவல்துறை அளிக்கும் அழைப்பாணையைக் கிழிக்காமல், சாமி அறையிலா மாட்ட முடியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வினா எழுப்பியிருக்கிறார்.
நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரின்கீழ் காவல்துறையினர் விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பியிருக்கும் நிலையில், தர்மபுரியில் வெள்ளிக்கிழமை (28.02) செய்தியாளர்களைச் சந்தித்தார் சீமான்.
அப்போது பேசிய அவர், நடிகை விஜயலட்சுமிக்கு மாதம் ரூ 50 ஆயிரம் வீதம் 2, 3 மாதங்களுக்கு கொடுத்தேன் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
“ஒரு நடிகை, ஒரு பெண் சொன்னாலே அது குற்றம் ஆகிவிடுமா. ஒருவர் புகார் கூறிவிட்டால் உடனே குற்றவாளி என முத்திரை குத்திவிடுவதா? எனக்கும் அவருக்கும் திருமணமாகியிருக்கிறது என்றால் அதற்கு ஆதாரம் எங்கே?
“நான் அவருக்கு 7 முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்தேனாம். அப்படியென்றால் ஒரே ஆண்டில் 7 முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளன் நான்தான். அதுவும் சிறையில் இருந்தபடி கட்டாயக் கருக்கலைப்பு செய்ய முடியுமா?
“நான் தெருவில் நின்றுகொண்டு இருக்கும்போது நடிகைக்கு கொடுக்க என்னிடம் 2 கோடி ரூபாய் எங்கே இருக்கும்?
“ஒரு முறை வாழ்வதற்கு வழியில்லை, நான் இறந்துவிடுவேன், எனக்கு உதவி செய்யுங்கள் என்று ஒலிப்பதிவு வழி உதவி கேட்டிருந்தார்.
“அதனால்தான் மாதம் ரூ 50 ஆயிரம் என இரண்டு மூன்று மாதங்களுக்கு கொடுத்து உதவினேன். அழுதபடி உதவி கேட்டதால் கொடுத்து தொலைக்க வேண்டியதாகிவிட்டது. மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
“விருப்பமில்லாத பெண்ணை நான் பாலியல் வன்கொடுமை செய்தது போல பேசுகிறார்கள். என்னைச் சமாளிக்க முடியாமல் திமுக அரசு அந்தப் பெண்ணை அழைத்து வருகிறது. அந்தப் பெண் பாலியல் புகார் கூறினால் குற்றமாகி விடுமா?” என்றும் அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
இதனிடையே, “என் கணவர் (சீமான்) மக்களுக்கான நேர்மையான தலைவர். ஆனால், காவல்துறை எங்களை அசிங்கப்படுத்துவது போல் செயல்படுகிறது. மனரீதியாக எங்களைத் துன்புறுத்த வேண்டும் என காவலர்கள் செயல்படுகின்றனர். எங்கள் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் செயல்படுகிறார். அவர்மீது மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடுப்போம்,” என்று சீமானின் மனைவி கயல்விழி கூறியுள்ளார்.
தன் மீதான வழக்குகளை சீமான் சட்டப்படி எதிர்கொண்டு விசாரணையை சந்திப்பார் என்றும். வழக்குகளைச் சீமான் எதிர்கொள்வதை நினைத்து எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நடிகை விஜயலட்சுமி கடந்த 2023 ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதில், “திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான், என்னை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டார். பிறகு அவண்டன் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்ததன் பயனாக 7 முறை கருவுற்றேன். சீமான் என்னைக் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு கயல்விழி என்பவரைத் திருமணம் செய்துகொண்டு என்னை ஏமாற்றிவிட்டார்,” என்று விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.