நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் நாளை தி.மு.கவில் இணைகிறாரா?

தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை நாகையில் நடைபெறும் தி.மு.க மாவட்டச் செயலாளர் கெளதமன் மகன் திருமண விழா, ஐடிஐ மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நாகை நாகூர் சாலையில் கட்டப்பட்டுள்ள தி.மு.க-வுக்கு சொந்தமான தளபதி அறிவாலயம் திறப்பு விழா, மாலை தளபதி அறிவாலயத்தில் நடைபெறும் கட்சி நிர்வாகிகளுடான ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று இரவு நாகை வரும் ஸ்டாலின் அரசினர் சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் நாளை மாலை தளபதி அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தி.மு.க-வில் இணைய இருப்பதாக பேசப்படுகிறது. இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், “நாம் தமிழர் கட்சியில் இருந்த பல அறியப்பட்ட முகங்களில் காளியம்மாளும் ஒருவர். சீமானுடன் கருத்து முரண் ஏற்பட்ட பிறகு அவர் அக்கட்சியிலிருந்து விலகப்போவதாக பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த வாரம் அவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக முறைப்படி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து காளியம்மாள் தி.மு.கவில் இணைகிறார், த.வெ.க-வில் இணைகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பியது. இவை குறித்து வெளிப்படையாக எதுவும் பேசாமல் விலகுவதாக அறிவித்த பின்னர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு சைலண்ட் மோடில் இருக்கிறார் காளியம்மாள்.
இந்த நிலையில் நாளை நாகையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மாலை தளபதி அறிவாலயத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் ஸ்டாலின் முன்னிலையில் காளியம்மாள் தி.மு.கவில் இணைவதற்கு வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.
ஆனாலும் எதுவும் உறுதியாக சொல்லப்படாத நிலையில் யூகத்தின் அடிப்படையிலேயே இவை பேசப்படுகிறது. நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதற்கு முன்பே, அரசியலில் தனது அடுத்த பயணம் குறித்து யோசிக்க தொடங்கி விட்டார் காளியம்மாள். நாகை பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஸை சந்தித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
அப்போது காளியம்மாள் தரப்பில் சில டிமாண்ட் வைக்கப்பட்டதாம். குறிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் நாகை தொகுதியில் வேட்பாளராக தன்னை நிறுத்த வேண்டும் என்றாராம். இதை அன்பில் மகேஸ் ரசிக்கவில்லை என்கிறார்கள்.
அதே சமயத்தில் பனையூர் சென்று விஜயை சந்தித்தார், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் என்றெல்லாம் வெளியில் பேசப்படுகிறது. நாம் தமிழரில் இருந்த போது தி.மு.க-வை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் காளியம்மாள். மயிலாடுதுறை நாடளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட போது அப்போதைய தி.மு.க எம்.பியை நடிகர் வடிவேலு பாணியில் கலாய்த்தது வைரல் ஆனது.
இப்படி தி.மு.க-வுக்கு எதிராக பேசிவிட்டு இப்போது அந்த கட்சியில் இணைவதை மக்கள் எப்படி எடுத்து கொள்வார்கள் என்றெல்லாம் யோசிப்பதால், உச்சபட்ச குழப்பத்தில் இருக்கிறார் காளியம்மாள். த.வெ.க-வில் இணைவதாக இருந்தால் அக்கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் இணைந்திருப்பார். ஆனால் அது போன்று எதுவும் நடக்காததால் காளியம்மாள் சாய்ஸ் தி.மு.கவாகத்தான் உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நாளை அவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள். எதுவாக இருந்தாலும் நாளை தெரிந்து விடும். இல்லை என்றால் காளியம்மாள் வெளிப்படையாக தன் நிலைப்பாட்டை சொன்னால் மட்டும் இது முடிவுக்கு வரும். அதுவரை யூகங்கள் அடிப்படையில் பேச்சுக்கள் கிளம்பி கொண்டே இருக்கும்” என்றனர்.