பொலிவியாவில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில், 37 பேர் பலி.

லா பாஸ், பொலிவியாவில் மலைப்பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில், 37 பேர் பலியாகினர்; 41 பேர் படுகாயம் அடைந்தனர்.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் ஓருரோ நகரில், கலாசார திருவிழா நடைபெறுகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் மிகப்பெரிய விழாவான இதில் பங்கேற்க, ஆயிரக்கணக்கானோர் குவிகின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள உய்யுனி நகரில் இருந்து ஓருரோ வழியாக கொல்சானி என்ற இடத்துக்கு பயணியர் பஸ் நேற்று புறப்பட்டது. எதிர்திசையில் மற்றொரு பஸ் வந்தது.
பொலிவியாவின் ஆபத்தான மலைப்பாதை வழியாக, இந்த பஸ்கள் எதிரெதிரே வந்து கொண்டிருந்தன. சாலையில் மிகக் குறுகலான பகுதியில் இரு பஸ்களும் வந்தபோது, பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் மோதின. மோதிய வேகத்தில் இரண்டு பஸ்களும் கவிழ்ந்தன.
இந்த விபத்தில், ஏழு குழந்தைகள் உட்பட 37 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஆறு பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணியர்; 41 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்த இடம், மலைப்பகுதி என்பதால் மீட்புப் பணியில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில், விபத்துக்குள்ளான ஒரு பஸ்சின் டிரைவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.