தேசபந்து நாளை சரணடைவார் என தகவல்… பெரும்பாலும் மருத்துவமனையில் இருந்து வெளிப்படுவார்?

நீதிமன்ற உத்தரவின் மூலம் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னக்கோன் நாளை (03) பொலிஸில் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் பெரும்பாலும் ஒரு மருத்துவமனையில் இருந்து வெளிவர வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து குறித்து இன்று ஊடகங்கள் ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவிடம் கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார்.
“முன்னாள் பொலிஸ் மா அதிபரை பொலிஸார் தேடி வருகின்றனர். முன்னாள் பொலிஸ் மா அதிபர் தயவு செய்து பொலிஸில் சரணடைய வேண்டும் என்று சொல்வது தான் சொல்ல வேண்டியது.”
“ஏனென்றால் முன்னாள் பொலிஸ் மா அதிபரை பொலிஸார் அதிகமாகத் துரத்துவது நல்லது இல்லை. அது வெட்கக்கேடானது.” என்று அமைச்சர் கூறினார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து தேசபந்து எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு சொந்தமான இரண்டு வீடுகளை சோதனையிட்டும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். தேசபந்து காணாமல் போன சம்பவம் நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
2023 டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை பலான்ன பகுதியில் உள்ள ஹோட்டல் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு தொடர்புடைய நீதிமன்ற உத்தரவு தேசபந்துவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டது.
அவரைத் தவிர, கொழும்பு குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி அன்ஸ்லம் டி சில்வா உட்பட மேலும் எட்டு பேரை கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை சதி செய்ததாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு பொலிஸார் அளித்த கோரிக்கையின் பேரில், தேசபந்து தென்னக்கோனுக்கு வெளிநாடு செல்லத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.