யேர்மன் தேர்தல் முடிவுகள் – பாரம்பரியக் கட்சிகளுக்குப் பின்னடைவு சுவிசிலிருந்து சண் தவராஜா.

ஐரோப்பாவின் மிகப் பாரிய பொருளாதார வல்லரசான யேர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. பிரடெரிக் மேர்ஸ் தலைமையிலான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம், கிறிஸ்தவ சமூக ஒன்றியம் ஆகிய கட்சிகளின் கூட்டணி 28.6 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அதிக இடங்களைப் பிடித்துள்ளது. இந்தக் கூட்டணி நாடாளுமன்றத்தில் 208 ஆசனங்களைப் பெற்றுள்ளது. மொத்தமாக 630 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 316 ஆசனங்கள் தேவையாக உள்ள நிலையில் பெரும்பாலும் நடப்பு அதிபரான ஒலாப் சொலஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் கூட்டணி ஆட்சியமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய ஆட்சியில் பிரடெரிக் மேர்ஸ் ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளார்.

ஆட்சிக் கட்சியாக விளங்கிய சமூக ஜனநாயகக் கட்சி இதுவரை கால வரலாற்றில் மிகக் குறைந்தளவான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 16.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற இக் கட்சி 120 ஆசனங்களை வென்றுள்ளது. 11.6 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ள பசுமைக் கட்சி 85 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இந்தத் தேர்தலில் மிகவும் ஆச்சரியம் தரத்தக்க முடிவு தீவிர வலதுசாரிக் கட்சியாகக் கருதப்படும் யேர்மனிக்கான மாற்று என்ற கட்சி 20.8 விழுக்காடு வாக்குகளைப் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்து இருப்பதாகும். 2013இல் முதல் தடவையாகத் தேர்தலைச் சந்தித்த இக் கட்சியினால் 4.7 விழுக்காடு வாக்குகளையே பெற முடிந்தது. யேர்மன் தேர்தல் சட்டங்களின் படி ஆகக் குறைந்தது ஐந்து விழுக்காடு வாக்குகளைப் பெற்ற கட்சிக்கே நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைக்கும் என்பதால் இக் கட்சிக்கு ஆசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

2017இல் இரண்டாவது தடவை தேர்தலைச் சந்தித்த இக் கட்சி 12.6 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதல் தடவையாக நாடாளுமன்றத்தில் பிரவேசித்தது. அந்தத் தேர்தலில் இக் கட்சி 94 ஆசனங்களை வென்றிருந்தது. அத்தோடு யேர்மன் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாகவும் மாறியது.
எனினும் 2021இல் இக் கட்சியின் வாக்கு வீதம் 10.4 ஆகக் குறைந்தது. அதனால் இக் கட்சி ஐந்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

ஆனால் தற்போதைய தேர்தலில் கடந்த முறையை விடவும் இரண்டு மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று இக் கட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது கிடைத்த வாக்குகளின் படி இக் கட்சிக்கு 152 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

தீவிர வலதுசாரிக் கொள்கைகள் தொடர்பில் விமர்சனங்களைச் சந்தித்து வரும் இக் கட்சியோடு கூட்டணி வைப்பதை ஏனைய அனைத்துக் கட்சிகளும் நிராகரித்து வந்தமை குறிப்பிடத்தக்க விடயம். அதேவேளை, இந்தக் கட்சியின் மாநாடு ஒன்றில் அமெரிக்கத் தொழிலதிபரும், ஜனாதிபதி ட்ரம்பின் ஆலோசகருமான எலான் மஸ்க் காணொளி மூலம் உரையாற்றியமை அண்மைய காலகட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்திருந்தமை வாசகர்களுக்கு நினைவிருக்கக் கூடும்.

கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்ததை விடவும் யேர்மனிக்கான மாற்றுக் கட்சியின் தேர்தல் முடிவுகள் பற்றியே ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளதைப் பார்க்க முடிகின்றது.

ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தீவிர வலதுசாரிக் கட்சிகளை ஆதரிப்பதில் வாக்காளர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் பாரம்பரிய அரசியல் கட்சிகள் மக்களின் நாடித்துடிப்பைக் கணித்து, அவர்களின் தேவைகளை சரியாக அறிந்து செயற்படாத நிலையில், தங்கள் தேர்தல்கால வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத நிலையில் வேறு கட்சிகளை மக்கள் நாடிச் செல்வது இயல்பானதே. யேர்மன் தேர்தலிலும் இதுவே நடந்துள்ளது. வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்புகளின் போது அவர்களில் பெரும்பாலானவர்கள் இத்தகைய கருத்தையே முன்மொழிந்து உள்ளனர்.

தேர்தல் முடிவுகளைப் பகுப்பாய்வு செய்து பார்க்கையில் கிழக்கு யேர்மனியில் யேர்மனிக்கான மாற்றுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளதைக் காண முடிகின்றது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் இக் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. தலைநகர் பேர்லினில் மாத்திரம் இடதுசாரிக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. சில மாநிலங்களில் யேர்மனிக்கான மாற்றுக் கட்சி 40 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளமையைப் பார்க்க முடிகின்றது.

சோசலிசக் கொள்கையைப் பின்பற்றிய மேனாள் கிழக்கு யேர்மனி வடக்குடன் இணைந்த போதிலும் வடக்கு மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தப் பிராந்திய வாக்களார்களிடம் நிலவும் இத்தகைய உணர்வை யேர்மனிக்கான மாற்றுக் கட்சி தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. அதேவேளை மேற்கு யேர்மனியில் உள்ள ஒருசில இடங்களை இந்தக் கட்சி வென்றுள்ள போதிலும் மிகக் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை 25 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் மத்தியிலும் இக் கட்சி அதிக ஆதரவைப் பெற்றுள்ளமை தெரிகின்றது. ஒட்டு மொத்தமாக இடதுசாரிக் கட்சியே இளையோர் மத்தியில் அதிக ஆதரவு கொண்ட கட்சியாக இந்தத் தேர்தலில் பரிணமித்திருக்கின்றது. இடதுசாரிக் கட்சி இளையோர் மத்தியில் 25 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேவேளை யேர்மனிக்கான மாற்றுக் கட்சி 25 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் மத்தியில் 21 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தவிர, இந்தக் கட்சி தொழிலாளர்கள் மத்தியிலும், வேலையற்றோர்கள் மத்தியிலும் அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளதையும் பார்க்க முடிகின்றது.

தற்போதைய நிலையில் ஆட்சி அமைப்பதற்கான கூட்டணி தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்துவரும் சில நாட்களில் புதிய அரசாங்கம் தொடர்பிலான அறிவித்தல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடதுசாரிக் கட்சி தவிர்ந்த பெரும்பாலான கட்சிகள் பெரும்பாலான விடயங்களில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டனவையாகவே உள்ளன. ஒருசில விடயங்களில் மாத்திரமே அவற்றிடையே சிறிய வேறுபாடுகள் உள்ளன.

வெளியுறவுக் கொள்கை, பொருண்மியக் கையாளுகை, அகதிகள் விவகாரம் மற்றும் உக்ரைன் போருக்கான தீர்வு ஆகிய விவகாரங்களில் கருத்து ஒற்றுமை கொண்டு அரசாங்கம் பதவி ஏற்கவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கையாள்வது தொடர்பிலும் அது கவனம் செலுத்தியே ஆக வேண்டியுள்ளது. உக்ரைன் போர் காரணமான செலவினங்கள், ரஸ்யாவிடம் இருந்து மிகவும் மலிவாகக் கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு நிறுத்தம் காரணமாக அதிகரித்துள்ள விலைவாசி, தொழில் முயற்சிகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலை என்பவற்றிலும் கூட்டணிக் கட்சிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன.

அதேவேளை இரண்டாவது பெரிய சக்தியாக உருவெடுத்துள்ள யேர்மனிக்கான மாற்றுக் கட்சியை அரசாங்கம் அமைப்பதில் இருந்து நீக்கி வைப்பது சரியான முடிவுதானா என்பது போன்ற விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. பாரம்பரிய ஆளுங் கட்சிகள் மீது கொண்ட வெறுப்பு காரணமாக யேர்மனிக்கான மாற்றுக் கட்சிக்கு ஆதரவு நல்கிய மக்களின் குரலை ஒதுக்கி(?) வைப்பது நன்மை பயக்குமா என்ற வாதத்துக்கும் ஆளுங் கூட்டணி பதில் சொல்லவேண்டிய நிலையில் உள்ளது. இத்தகைய வாக்காளர்களின் குரலை மதிக்காமல் நடந்து கொள்வதானது அவர்களை மேலும் மேலும் எதிர்ப்பு அரசியலை நோக்கியே நகர்த்தும் என்பதே யதார்த்தம். ஏற்கனவே பொருளாதார அடிப்படையில் தாங்கள் நலிந்த நிலையில் இருக்கிறோம் என நினைக்கும் மேனாள் கிழக்கு யேர்மனி மக்களின் குறைகளுக்கு ஆளுங் கூட்டணியால் எத்தகைய நிவாரணத்தை வழங்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

இத்தகைய குறைகள் அடுத்துவரும் 4 ஆண்டுகளில் கண்டு கொள்ளப்படாதுவிட்டால் அடுத்து வரும் தேர்தலில் யேர்மனுக்கான மாற்றுக் கட்சி யேர்மனியின் அதிக செல்வாக்கு உள்ள கட்சியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதே அரசியல் நோக்கர்களின் பார்வையாக தற்போது உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.