உக்ரேனுக்கு நெருக்கடி; உளவுத் துறை தகவல்களையும் நிறுத்தியது அமெரிக்கா

அமெரிக்கா, உக்ரேனுக்கு அளித்து வந்த உளவுத் துறை தகவல்களையும் நிறுத்திவிட்டது. இதனால் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி, ரஷ்யாவுடன் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்.

சில நாள்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும், ஸெலன்ஸ்கிக்கும் இடையே உலக ஊடகங்கள் முன்பு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் ஸெலன்ஸ்கி சென்றுவிட்டார்.

இந்நிலையில் அமெரிக்கா, உக்ரேனுக்கான சலுகைகளை ஒவ்வொன்றாக நிறுத்தி வருகிறது.

முன்னதாக, உக்ரேனுக்கான அனைத்து ராணுவ உதவிகளும் நிறுத்திவைக்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது.

தற்போது உளவுத் தகவல்களை உக்ரேனுடன் பகிர்ந்துகொள்வதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஜான் ராட்கிளிஃப் இதனை மார்ச் 5ஆம் திகதியன்று தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையால் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலைத் தற்காக்கும் உக்ரேனின் ஆற்றல் பாதிக்கப்படும்.

அமெரிக்காவின் அடுத்தடுத்த அழுத்தத்திற்கு பலன் ஏற்பட்டுள்ளது.

மார்ச் 4ஆம் திகதி ஸெலன்ஸ்கியிடமிருந்து தனக்கு கடிதம் வந்துள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார்.

அதில் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன்வருவதாக ஸெலன்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.

“ராணுவ முன்களம், உளவுத் துறை முன்களம் இரண்டிலும் ஏற்பட்டுள்ள தடைகள் விலக்கப்படலாம் என்று நினைக்கிறேன்,” என்று ஃபாக்ஸ் பிஸ்னஸ் நெட்வொர்க்கிட்ம் ரட்கிளிஃப் தெரிவித்தார்.

“உக்ரைனுடன் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றுவோம் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் அங்குள்ள ஆக்கிரமிப்பை நாங்கள் பின்னுக்குத் தள்ள வேண்டும். இந்த அமைதி பேச்சுவார்த்தைகள் முன்னேற உலகை ஒரு சிறந்த இடத்தில் வைக்க வேண்டும்,” என அவர் மேலும் கூறினார்.

டிரம்ப் வட்டாரத்தை நன்கறிந்த ஒரு வட்டாரம், ரஷ்ய இலக்குகளைத் தாக்க உக்ரைன் பயன்படுத்திய தரவு உட்பட ‘எல்லாவற்றையும்’ வழங்குவதை அமெரிக்கா நிறுத்திவிட்டதாகக் கூறினார்.

ஆனால் உக்ரேனுக்கான உளவுத் துறை தகவல் பகிர்வில் ஒரு பகுதி மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.