ஜெய்சங்கரைத் தாக்க காலிஸ்தான் தீவிரவாதிகள் முயற்சி

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைத் தாக்க காலிஸ்தான் தீவிரவாதிகள் முயன்றனர்.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (மார்ச் 6) நிகழ்ந்தது.
லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்ற அமைச்சர் ஜெய்சங்கரைத் தாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அமைச்சர் ஜெய்சங்கரின் காரை நோக்கி ஆடவர் ஓடியதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது.
அந்த ஆடவர் பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரிகளின் முன் இந்தியக் கொடியைக் கிழித்துச் சேதப்படுத்தினார்.
இருப்பினும், அந்த அதிகாரிகள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.
அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடலில் ஈடுபட்ட இடத்துக்கு வெளியே, காலிஸ்தான் தீவிரவாதிகள் அவர்களது இயக்கத்தின் கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
அமைச்சர் ஜெய்சங்கர் பிரிட்டனுக்கு மார்ச் 4லிருந்து மார்ச் 9 வரை அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லேமி, முக்கிய அதிகாரிகள் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியா-பிரிட்டன் இடையிலான முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவத்தை வலுப்படுத்தும் இலக்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மார்ச் 6லிருந்து மார்ச் 7 வரை அமைச்சர் ஜெய்சங்கர் அயர்லாந்துக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு அவர் அயர்லாந்து வெளியுறவு அமைச்சர் சைமன் ஹாரிசை சந்தித்துப் பேசுவதுடன் அந்நாட்டில் வசிக்கும் இந்திய நாட்டவர்களைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.