ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெண் பணியாளர்கள் மட்டும் கொண்ட சிறப்பு ரயில் இயக்கம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெண் பணியாளர்கள் மட்டும் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சர்வதேச மகளிர் நாள்-ஐ முன்னிட்டு பெண் பணியார்கள் மட்டும் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. அம்மாநில தலைநகர் ராஞ்சியிலிருந்து டோரி வரை இயக்கப்படும் ‘மெயின்லைன் எலக்டிரிக் மல்டிபள் யூனிட்’ ரயிலை ராஞ்சியின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான தீபாளி அம்ரிட் இயக்கவுள்ளார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 8) காலை 8.50 மணியளவில் ராஞ்சி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயிலானது மொத்தம் 14 நிறுத்தங்களைக் கடந்து காலை 11.30 மணியளவில் டோரி ரயில் நிலையத்தை அடையவுள்ளது. இந்த ரயிலின் ஓட்டுநர், பயணச்சீட்டு பரிசோதகர், ஆர்.பி.எஃப். அதிகாரிகள் மற்றும் பிற பணியாளர்கள் என அனைவரும் பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த ரயிலின் ஓட்டுநர் தீபாளி கூறுகையில், இது வெறும் ஓர் சிறப்பு ரயில் மட்டும் இல்லை, சமூகத்திற்கான செய்தி எனவும் இந்த ரயிலானது கிராமப்புறங்கள் வழியாக செல்லும்போது அங்குள்ள பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்க ஊக்குவிப்பதாகவும், அவர்களும் இதுபோன்ற சிறப்புகளில் பங்கெடுக்க முடியும் என அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சர்வதேச மகளிர் நாளன்று இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலானது ராஞ்சி ரயில் பிரிவின் பெண் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டு தோறும் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.