கர்நாடகத்தில் ஏரிக்கரையில் சுற்றுலா சென்றிருந்த இஸ்ரேலியப் பெண் உள்பட இருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

கர்நாடகத்தில் ஏரிக்கரையில் சுற்றுலா சென்றிருந்த இஸ்ரேலியப் பெண்ணும் அவரது பணிப்பெண்ணும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த 27 வயது பெண் மற்றும் அவரது ஆண் நண்பர்களான அமெரிக்கர் ஒருவர், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒருவர், ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் என 5 பேர் ஒன்றாக சேர்ந்து கர்நாடகத்தில் சனாப்பூர் ஏரிக்கரையில் இரவு விருந்து மேற்கொண்டனர். விருந்தின்போது, அவர்களுடன் பணிப்பெண் ஒருவரும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த வழியாக வந்த இருவர் பெட்ரோல் நிலையத்துக்கு வழி கேட்பதுபோல, அவர்கள் 5 பேரிடமும் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, ஆண்நண்பர்கள் மூவரையும் அருகிலிருந்த கால்வாயில் தள்ளிவிட்டு, இஸ்ரேலியப் பெண் மற்றும் பணிப்பெண் இருவரையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசினார்கள் என்றும், கால்வாயில் விழுந்தவர்களில் ஒருவர் காணாமல் போய்விட்டதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, புகாரின் அடிப்படையில் மரணம் அல்லது கடுமையான காயம், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி தொடர்பான பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களைத் தேடும் பணியில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கங்காவதி கிராமப்புற காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.