எதிர்க்கட்சிகள் ஆளும் ஏழு மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்.

எதிர்க்கட்சிகள் ஆளும் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த ஏழு முதல்வர்கள் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசனை நடத்த ஏதுவாக சென்னையில் வரும் 22ஆம் தேதி சிறப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏழு மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை நடவடிக்கை மேற்கொள்ள திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நடவடிக்கையால் தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என முதல்வர் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய கட்சித் தலைவர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
“நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு எதிரானவர்கள் அல்ல. தங்கள் தேசியக் கடமைகளை நிறைவேற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக இந்த தொகுதி மறுவரையறை அமைந்து அதன்மூலம், அம்மாநிலங்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதாக அமைந்துவிடும் என்பதற்காகத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
“நாம் தனித்தனி அரசியல் அமைப்புகளாக அல்லாமல் நமது மக்களின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாக ஒன்றிணைய வேண்டும். மார்ச் 22, 2025 அன்று சென்னையில் தங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்,” என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.