கனடிய விளைபொருள்களுக்கு எதிராக சீனா 100% வரிவிதிப்பு.

கனடா நாட்டின் $2.6 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள விளைபொருள்கள், உணவுப் பொருள்களுக்கு எதிராக சனிக்கிழமை (மார்ச் 8ஆம் தேதி) சீனா வரி விதித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் சீனப் பொருள்களுக்கு எதிராக கனடா விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போதைய சீன வரிவிதிப்பு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், அமெரிக்க அதிபர் ஆரம்பித்து வைத்த வரி யுத்தத்தின் அடுத்த கட்டமாக சீனா-கனடா வரிவிதிப்பு அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
சீனா விதித்துள்ள வரிகள் இம்மாதம் 20ஆம் திகதி நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. அவை சீன மின்சார வாகனங்களுக்கு எதிரான கனடாவின் 100 விழுக்காடு வரி, சீன அலுமினிய, எஃகுப் பொருள்களுக்கு எதிரான 25 விழுக்காடு வரி ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘ரேப்சீட்’ என்ற கெனோலா சமையல் எண்ணெய் தயாரிப்புக்குப் பயன்படும் விதை மீது சீனா வரிவிதிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்த விளைபொருள்களை கனடா சீனாவுக்கு மிக அதிகமாக ஏற்றுமதி செய்யும் நிலையில், இதற்கு சீனா வரிவிதிக்காதது கனடாவுடன் தான் பேச்சுவார்த்தைக்கு தயார் என்பதை சீனா கோடி காட்டுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.