அமெரிக்காவைக் கைவிடும் ஆய்வாளர்களை வரவேற்க தயாராகும் பிரான்ஸ்.

புதிய அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கொள்கைகள் காரணமாக அமெரிக்காவைவிட்டு வெளியேறும் ஆய்வாளர்களை வரவேற்பது குறித்துப் பரிசீலிக்கும்படி பிரெஞ்சு அரசாங்கம் தன் நாட்டிலுள்ள ஆய்வு நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
இரண்டாம் முறையாக டிரம்ப் அதிபர் பொறுப்பை ஏற்றபின், உயிர் காக்கும் ஆய்வுகளுக்கான நிதியுதவியை நிறுத்தி வருகிறார். அத்துடன், சுகாதாரம், பருவநிலை தொடர்பான அரசாங்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
“புகழ்பெற்ற ஆய்வாளர்கள் பலரும் அமெரிக்காவில் தங்கள் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதனால், நாம் இயல்பாகவே அவர்களில் பலரை வரவேற்க விரும்ப வேண்டும்,” என்று உயர்கல்வி, ஆய்விற்கான பிரெஞ்சு அமைச்சர் ஃபிலிப் பாப்டிஸ்ட் தமது நாட்டிலுள்ள ஆய்வு நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதன் தொடர்பில், தொழில்நுட்பம், அறிவியல் துறைகளில் உறுதியான பல பரிந்துரைகளை தம்மிடம் அளிக்கும்படியும் ஆய்வியல் துறைத் தலைவர்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஆய்வாளர்களை, குறிப்பாக பருவநிலை மாற்றம் சார்ந்து இயங்குவோரை வரவேற்பதற்கென்றே புதியதொரு திட்டத்தை ஏற்படுத்தவுள்ளதாக பிரான்சின் எக்ஸ் மார்சே பல்கலைக்கழகம் கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நிதியாதரவு மீட்பு, ஆட்குறைப்புடன் நின்றுவிடாமல், உலகச் சுகாதார நிறுவனத்திலிருந்தும் பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்தும் அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல நகரங்களிலும் மார்ச் 7 வெள்ளிக்கிழமை அறிவியல் வல்லுநர்கள் பேரணி சென்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரான்சின் டூலூஸ் நகரில் நடைபெற்ற ஒற்றுமைப் பேரணியில் பிரெஞ்சு அறிவியலாளர்கள் பங்கேற்றனர்.