47 ஆண்டுகளுக்குப் பின் யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவின் திருச்சி இடையே நேரடி விமான சேவை !

இந்தியாவின் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மார்ச் 30 முதல் யாழ்ப்பாணம் மற்றும் திருச்சி இடையே புதிய விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் திருச்சி இடையே 47 ஆண்டுகளுக்குப் பின் நேரடி விமான சேவையை தொடங்குகிறது, இதற்கு முன்பு ஏர் சிலோன் இந்த விமான சேவையை இயக்கியது.
இண்டிகோ நிறுவனம் தொடங்கும் இந்த நேரடி விமான சேவை தினமும் இயக்கப்படும் என அந்நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தினமும் மதியம் 1-25 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் புறப்படும், பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 3-10 மணிக்கு திருச்சிக்கு திரும்பும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
வணிகம் மற்றும் மத சுற்றுலாக்களுக்கு இந்த விமான வழித்தடம் பிரபலமாக உள்ளது, நேரடி விமான சேவை தினமும் இயக்கப்படுவது இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று மல்ஹோத்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அதிக விமான சேவைகளை இயக்கும் நிறுவனமும் இண்டிகோ தான் என்று அந்நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.