உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் பொது இடத்தில் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ஹிந்தி பத்திரிகை ஒன்றில் செய்தியாளராகப் பணியாற்றிய ராகவேந்திரா பாஜ்பாய்(35) என்ற இளைஞர் சனிக்கிழமையன்று தமது இருசக்கர வாகனத்தில் தில்லி-சீதாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஹெம்பூர் ரயில்வே கிராஸிங் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரை பைக்கில் சென்று வழிமறித்த சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து மாயமாகிவிட்டனர்.

குண்டடிபட்டதில் படுகாயமடைந்த பாஜ்பாயை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மஹோலி தாலுகாவில் நெல் கொள்முதல் மற்றும் நில ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடப்பதை வெளிக்கொண்டு வந்ததால், அவருக்கு ஏற்கெனவே கைப்பேசி அழைப்பு வழியாக கொலை மிரட்டல்கள் பல வந்திருந்ததாகவும் அவர்தம் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது கைப்பேசி அழைப்பு விவரங்களைச் சேகரித்து காவல் துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

மேலும், பத்திரிகையாளர் படுகொலை வழக்கில் தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை நடைபெற்று வருவதாக உத்தரப் பிரதேச காவல் துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.