ஸ்டார்லிங்க் ஒப்பந்தம்: ‘ஒன்றிணைந்த’ மஸ்க், அம்பானி.

முக்கே‌ஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், ஸ்டார்லிங்க் துணைக்கோள் (satellite) இணையச் சேவைகளை இந்தியாவுக்குக் கொண்டுவர வகைசெய்யும்.

ஒப்பந்தம் கையெழுத்தானது ஆச்சரியமான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதன் தொடர்பில் திரு அம்பானி, திரு மஸ்க் இருவருக்கும் இடையே பல மாதங்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகளே அதற்குக் காரணம்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்தியாவின் ஆகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், ஸ்டார்லிங்க் கருவிகளைத் தனது சில்லறை வர்த்தகக் கடைகளில் வைத்திருக்கும். இதன் மூலம், அத்தகைய பல சில்லறை வர்த்தகக் கடைகளில் ஸ்டார்லிங்க்கால் தனது கருவிகளை விநியோகிக்க முடியும்.

துணைக்கோள் இணையச் சேவைக்காக காற்றலைகளை யாருக்கு, எவ்வாறு ஒதுக்குவது என்பதன் தொடர்பில் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாகியான திரு மஸ்க்குக்கும் திரு அம்பானிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

மஸ்க், தனது நிறுவனத்தின் கருவிகளை இந்தியாவில் வெளியிட ஆரம்பித்தால் அவர் உள்ளூர் தொலைத்தொடர்புத் துறையில் அளவுக்கதிகமான ஆதிக்கம் செலுத்திவிடுவார் என்று ரிலையன்ஸ் கவலைகொண்டிருந்தது. இப்போது இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இந்தியச் செல்வந்தரான திரு அம்பானி, அவரது தொழில் எதிரியான திரு மஸ்க்கின் நிறுவனம் தயாரிக்கும் பொருள்களை விற்க முடியும்; அதேநேரம், இருவரும் வர்த்தக ரீதியான போட்டியிலும் ஈடுபட முடியும்.

இதேபோல், ஸ்டார்லிங்க்குக்கும் இந்தியாவின் இரண்டாவது ஆகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்த்தி ஏர்டெல்லுக்கும் இடையே பங்காளித்துவ ஒப்பந்தம் கையெழுத்தானது. ஸ்டார்லிங்க்-ரிலையன்ஸ் ஜியோ ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முதல் நாள் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஸ்டார்லிங்க், இந்தியாவில் அதன் செயல்பாடுகளைத் தொடங்க அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து ஒப்புதல் பெறவேண்டும் என்பது இரு ஒப்பந்தங்களிலும் இடம்பெறும் நிபந்தனையாகும்.

Leave A Reply

Your email address will not be published.