ரயில் கடத்தல்; 190 பயணிகள் மீட்பு, 27 பிரிவினைவாதிகள் சுட்டுக்கொலை.

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் கடத்திய ரயிலிலிருந்து 190 பயணிகள் மீட்கப்பட்டனர். பாகிஸ்தான் பாதுகாப்புப் படை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 27 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை 450க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஜாஃபர் ரயில்மீது பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிப் படையினர் திடீர் தாக்குதலை நடத்தி பயணிகளை பிணையாக பிடித்தனர்.
சுரங்கப்பாதை அருகே மலைப்பகுதியில் ரயிலை கிளர்ச்சியாளர்கள் நிறுத்தினர்.பின்னர் அதில் இருந்த 200க்கும் மேற்பட்ட பயணிகளைப் பிணையக்கைதிகளாக சிறைபிடித்தனர். இந்த ரயிலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், காவல்துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோரும் பயணம் செய்தனர். அவர்களும் பிணையக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட ராணுவ வீரர்கள், காவல்துறையினர் என 30 பேரை கொன்றுவிட்டதாக பலுசிஸ்தான் கிளர்ச்சிப்படை அறிவித்துள்ளது.
இதற்கிடையே தகவலறிந்த பாதுகாப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தற்போது பாதுகாப்புப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த மோதலுக்கு நடுவே பணயக் கைதிகளில் 190 பயணிகளைப் பாதுகாப்புப்படையினர் மீட்டுள்ளனர். அவர்களில் பெண்கள் பலரும் அடங்குவர்.
முன்னதாக சில பணயக் கைதிகளை மட்டும் கிளர்ச்சியாளர்கள் விடுவித்தனர்.
பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 27 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இன்னும் கிளர்ச்சியாளர்களிடம் 200க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். அவர்களையும் விடுவிக்க பாதுகாப்புப் படை தொடர்ந்து போராடி வருகிறது.
இந்தத் தாக்குதலுக்கு அதிகாரபூர்வமாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், 48 மணி நேர காலக்கெடு விதித்துள்ளது. அதற்குள் பலுசிஸ்தான் அரசியல் கைதிகள், ஆதரவாளர்கள், ராணுவத்தால் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களை விடுவிக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது. இல்லையென்றால் பிணைக் கைதிகளை ஒவ்வொருவராகக் கொல்லப்படுவார்கள் என கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், கிளர்ச்சியாளர்களை பாதுகாப்புப் படையினர் முறியடித்து வருவதாகத் தெரிவித்தார்.
அப்பாவி பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்திய போராளிகளை “விலங்குகள்” என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பலுசிஸ்தான் அரசாங்கம், நெருக்கடி நிலையை நிர்வகிக்க அவசர நடவடிக்கைகளை அமல்படுத்தியது.