கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு – ட்ரூடோ ராஜினாமா, அமெரிக்காவுடன் வர்த்தக மோதல்!

ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியிலிருந்தும், லிபரல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகியதை அடுத்து, மார்க் கார்னி கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார். அதிக அரசியல் அனுபவம் இல்லாத ஒருவர் முதன்முதலாக கனடாவில் பிரதமராகியுள்ளார்.
மார்க் கார்னிக்கு தற்போது 59 வயது. இதற்கு முன்னர் அவர் வங்கியில் பணிபுரிந்தார். அவர் நாட்டின் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் ஆவார். ஜஸ்டின் ட்ரூடோ 9 ஆண்டுகள் நாட்டின் பிரதமராகவும், லிபரல் கட்சி தலைவராகவும் பதவி வகித்தார்.
ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் குறைவான கட்சி உறுப்பினர்கள் வாக்களித்த தேர்தலில் கார்னி அதிக வாக்குகளைப் பெற்றார். பதிவான வாக்குகளில் 86% வாக்குகளைப் பெற்று கார்னி பிரதமரானதாக கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகச் சிக்கல் நிலவும் வேளையில் அவர் பொறுப்பேற்றிருக்கிறார். கனடாவின் அரசுரிமைக்கு மரியாதை கிடைத்த பிறகு அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்திக்கப்போவதாக அவர் இதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். அமெரிக்கா வரி விதித்திருப்பதால் பதிலுக்கு அதன் பொருள்கள் மீது தொடர்ந்து தீர்வை விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கனடாவில் இன்னும் சில நாள்களில் திடீர்த் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.