வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்.

ஞாயிற்றுக்கிழமை மார்ச் 16 அன்று , காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்போது வீடு திரும்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரகுமான் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதயத்தில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உடலில் நீர் அளவு குறைந்துபோனதே காரணம் என்று மருத்துவர்கள் கூறியதாக என்டிடிவி போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ரமலான் நோன்பைப் பின்பற்றி வருவதால் ரகுமான் உடலில் நீரின் அளவு குறைந்துபோனதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணிக்கு 58 வயது ரகுமான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்தன. ‘இசிஜி’, ‘எக்கோகார்டியோகிராம்’ (echocardiogram) உள்ளிட்ட சோதனைகளை மருத்துவர்கள் அவரிடம் மேற்கொண்டதாக செய்தி வெளியானது.

ரகுமான் ‘ஏஞ்சியோகிராம்’ (angiogram) சிசிச்சையையும் மேற்கொள்ளக்கூடும் என்று அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் மாபெரும் இசைக் கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படும் ரகுமான், மார்ச் 15 சனிக்கிழமை இரவு இங்கிலாந்துத் தலைநகர் லண்டனிலிருந்து நாடு திரும்பினார்.

Leave A Reply

Your email address will not be published.