அக்காவின் வீட்டில் 8 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை மூன்றாவது முறையாக இதயம் செயலிழந்தபின் உயிரிழப்பு.

பங்ளாதேஷில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து மூன்று முறை இதயச் செயலிழப்பு ஏற்பட்டு பின்னர் வியாழக்கிழமை (மார்ச் 13ஆம் தேதி) அவர் உயிரிழந்ததாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறுமியின் தாயார் அளித்த புகாரின்படி மகுரா நகரில் உள்ள தனது அக்காவின் வீட்டுக்குச் சிறுமி சென்றிருந்தபோது மார்ச் 5ஆம் தேதி இரவுக்கும் மறுநாள் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமியின் அக்காவின் 18 வயது கணவன், அந்தக் கணவனின் சகோதரன் மற்றும் பெற்றோரை அதிகாரிகள் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறுமி உயிரிழந்த அதே நாள் இரவு கொந்தளித்துப் போன குடியிருப்பாளர்கள் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் வீட்டுக்குத் தீவைத்தனர்.
இரண்டு முறை சிறுமியின் உடல்நிலையை மருத்துவர்கள் சீராக்க முயன்றும் மூன்றாவது முறையாக செயலிழந்த சிறுமியின் இதயம் மீண்டும் இயங்காமல் போனதாக அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.
சிறுமி மார்ச் 8ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து ஆறு நாள்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
“என் மகள் பிழைத்துக்கொள்வாள் என்று நினைத்தேன். அவள் உயிர்ப்பிழைத்திருந்தால் தனியாக எங்குமே நான் அவளை அனுப்பப் போவதில்லை என்ற முடிவில் இருந்தேன்,” என்று உள்ளூர் ஊடகத்திடம் கூறினார் சிறுமியின் தாயார்.
இந்நிலையில், நீதி வேண்டும் என முறையிட்டு நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. அதிகாரிகள் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ள நிலையில் ஏழு நாள்களுக்குள் வழக்கு விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
மகளிர், சிறார்களைப் பாதுகாக்கும் சட்டத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் நீதி விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர்.
கடந்த எட்டு ஆண்டுகளில் சிறார்கள் தொடர்பாக பங்ளாதேஷில் பதிவான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் 3,438 என்று அந்நாட்டுத் அதிகாரபூர்வ தரவுகள் காட்டுகின்றன. இவற்றைத் தவிர மேலும் பல சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்படவில்லை என்றும் நம்பப்படுகிறது.
சிறுவர்கள் பெரும்பாலும் தங்களுக்கு அறிமுகமான நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.