ஆகாயத் தாக்குதல்களைத் தொடுத்த ரஷ்யா, உக்ரேன்

உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்திய உக்ரேன்-ரஷ்யா போர் முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் இருநாடுகளும் ஒன்றையொன்று (மார்ச் 16) தாக்கியுள்ளன.
மூவாண்டுகளாகத் தொடரும் போரில் உக்ரேனும் ரஷ்யாவும் இன்று காலை ஆகாயவழித் தாக்குதல்களைத் தொடுத்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அமெரிக்காவின் 30 நாள் சண்டைநிறுத்த உடன்பாட்டுக்குக் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்ததாகச் சொன்னார்.
ஆனால், முக்கியமான சில நிபந்தனைகள் உறுதிசெய்யப்படும் வரை ரஷ்யப் படைகள் தொடர்ந்து சண்டையிடும் என்றார் அவர்.
ரஷ்ய எல்லையில் பாய்ச்சப்பட்ட 31 ஆளில்லா வானூர்திகளை தனது ஆகாயப் படை இடைமறித்து தகர்த்ததாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு சொன்னது.
ரஷ்யாவின் பெல்கொரோட் எல்லையில் உக்ரேன் பாய்ச்சிய ஆளில்லா வானூர்தியால் மூவர் காயமடைந்தனர்.
அவர்களுள் 7 வயது சிறாரும் ஒருவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரேன் மீது ரஷ்யாவும் ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு பல தாக்குதல்களை நடத்தியது.
அதில் செர்னிஹிவ் வட்டாரத்தில் உள்ள உயர்மாடிக் கட்டடம் தீப்பற்றி எரிந்ததாக உக்ரேனின் அவசரநிலைச் சேவைப் பிரிவு சொன்னது.
தலைநகர் கீயவைச் சுற்றிய வட்டாரங்களில் தொடர்ச்சியாக வெடிகுண்டுகள் போடப்பட்டதாக உக்ரேனிய ஊடகங்கள் கூறின.
இந்நிலையில், அமெரிக்க, ரஷ்யாவின் உயர் அரசதந்திரிகள் போரை எப்படி முடிவுக்குக் கொண்டுவரலாம் என்பது பற்றிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசத் தொடங்கினர்.
ரஷ்யா கிழக்கு உக்ரேன் மீதான தனது தாக்குதலை நிறுத்தினால் அமெரிக்கா முன்வைக்கும் 30 நாள் நிபந்தனையற்ற போர் நிறுத்த உடன்பாட்டுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிப்பதாக உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.