தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து: மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மின் கம்பிகள் தீக்கிரையாயின.
இதையடுத்து, தீயை அணைக்க அருகில் உள்ள மூன்று மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
தீயணைப்பு வீரர்கள் ஏறக்குறைய 12 மணி நேரத்துக்கு மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி அனல் மின் நிலையம் தமிழக அரசுக்கு சொந்தமானதாகும். இங்கு நிறுவப்பட்டுள்ள ஐந்து அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை அன்று (மார்ச் 15) நள்ளிரவு வேளையில், அனல் மின் நிலையத்தில் குளிரூட்டி பகுதிக்கு அருகே திடீரென தீ மூண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இங்கிருந்து அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சார வயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், ‘பிரேக்’ எண்ணெய் உள்ளிட்ட, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களும் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு ஏற்பட்ட தீயை அணைப்பது கடினமான பணியாக மாறியது.
தீ விபத்து நிகழ்ந்த உடனேயே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன.
தீயணைப்பு வீரர்கள் வேகமாகச் செயல்பட்டு தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் 12 மணி நேரத்துக்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் இச்சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணியின்போது அனல் மின் நிலையப் பகுதியில் மூண்ட கரும்புகை மூட்டம் காரணமாக இரண்டு தீயணைப்பு வீரர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்றும் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் அனல் மின் நிலையத்தில் உள்ள, பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வயர்கள், மின் கம்பிகள் தீக்கிரையாகிவிட்டன.
மின் உற்பத்தி நிறுத்தப்பட இதுவும் ஒரு காரணமாகும்.