ஐ.எஸ்.ஐ.எஸ் உலகளாவிய செயல்பாட்டுத் தலைவர் மரணம்!

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உலகளாவிய செயல்பாட்டுத் தலைவர் அபு கதீஜா அல்லது அப்துல்லா மக்கி முஸ்லி அல் ரிஃபாய் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக்கின் அல் அன்பார் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டபோது, அவர் தற்கொலைப் படை ஆடைகளை அணிந்து ஆயுதங்களுடன் இருந்ததாகவும், அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டது ரிஃபாய் தான் என்பதை டி.என்.ஏ சோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதக் குழுவின் உலகளாவிய செயல்பாட்டுத் தலைவராக இருந்த அவர், உலகளவில் அந்த குழுவின் இரண்டாவது கட்டளை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.
மேலும், அபு கதீஜா , ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் விநியோகம், திட்டமிடல் மற்றும் நிதி மேலாண்மையை மேற்பார்வையிட்டுள்ளார்.
2023 இல், அமெரிக்கா அபு கதீஜா மீது தடைகளை விதித்தது. அவர் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஆளுநராக செயல்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் மேலும் ஒரு ஐ.எஸ்.ஐ.எஸ் போராளி கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ரிஃபாய் உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாதிகளில் ஒருவர் என ஈராக் பிரதமர் முகமது ஷியா அல் சுடானி அறிக்கை வெளியிட்டுள்ளார்.