ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை; இந்திய ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு.

தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள கோ ஃபங்கான் எனுமிடத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த 24 வயதுப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக இந்தியாவைச் சேர்ந்த இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடற்கரையில் பௌர்ணமி நாள் விருந்துக்குப் பிறகு இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 16) அதிகாலை 4.50 மணிக்கு நடந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் காவல்துறையிடம் புகாரளித்துள்ளார்.

அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்ததால் அந்த ஆடவர்களின் அடையாளம் குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

புகார் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட தாய்லாந்துக் காவல்துறை, சந்தேகத்துக்குரிய இருவரைக் கைது செய்துள்ளது. விஜய் தாதசாகேப், 47, ராகுல் பாலாசாகேப், 40, எனும் அவ்விருவரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தாதாசாகேப் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட நிலையில் பாலாசாகேப் அதை மறுத்துள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 4 முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் 80,000 முதல் 400,000 பாட் வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

Leave A Reply

Your email address will not be published.