மன்னாரில் 56 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
பேலிய கொட மீன் சந்தை தொகுதியில் கடந்த 21 ஆம் திகதி கொரோனா தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 56 பேருக்கு கடந்த வியாழக்கிழமை பீ. சி . ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று சனிக்கிழமை(24) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பேலிய கொட மீன் சந்தை தொகுதியில் கொரோனா தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 56 பேரூக்கு கடந்த வியாழக்கிழமை பீ. சி. ஆர் . பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பீ. சி . ஆர். பரிசோதனையின் மாதிரிகள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கையை எதிர் பார்த்துள்ளோம்.
மேலும் வவுனியா மாவட்டத்தில் வீதி திருத்த பணிகளில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற முடிவுகளை தொடர்ந்து மன்னார் மாவட்டத்திலும் வீதி திருத்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு குறிப்பாக வவுனியா- மன்னார் எள்ளை பகுதியான கல்மடு பகுதியில் வீதி திருத்த பணிகளில் ஈடு பட்டுள்ளவர்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 54 நபர்களுக்கு குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அவர்களது மாதிரிகள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளையும் எதிர் பார்த்துள்ளோம். மேலும் மன்னார் மாவட்டத்தில் கடந்த 7 ஆம் திகதி முதலாவது கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட 1 ஆம் 2 ஆம் நிலை தொடர்புடையவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனைகள் அனைத்தும் ‘கொரேனா தொற்று இல்லை’ என்ற முடிவை தந்தமையினால் தனிமைப் படுத்தப்பட்டவர்களில் அவரோடு தங்கி இருந்து வேலை செய்தவர்களை தவிர ஏனையோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வேலைத்தளத்தில் இருந்தவர்களுக்கான பீ.சி.ஆர்.பரிசோதனைகள் எதிர் வரும் திங்கட்கிழமை இடம் பெற்று அவர்களுக்கும் சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெற்றால் அவர்களும் விடுவிக்கப்படுவார்கள்.
பட்டித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அப்பகுதியில் 9 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி இருந்தனர். இவர்களில் ஒருவர் குணமடைந்து இரணவல வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்ப இருக்கின்றார். கடந்த முதலாம் திகதி முதல் இன்று வரை மன்னார் மாவட்டத்தில் 939 சமூக பீ . சி . ஆர் .பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுகின்ற பீ.சி.ஆர். பரிசோதனைகளுக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டவை.
கொரோனா தொற்ற என தனிமைப் படுத்தப்பட்டவர்களில் முதலாவது கொரோனா தொற்று உள்ளவர் என அடையாளம் காணப்பட்டவர் மற்றும் கட்டிட வேளை இடம் பெற்ற பகுதியில் இருந்த சிலரும் அதனை விட வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தொற்று உள்ளவர்களுடன் இருக்கக்கூடும் என்கின்ற சந்தேகப்படும் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.