மன்னாரில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தது NPP கட்சி(video)

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை (20) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கென தேசிய மக்கள் சக்தி கட்சியினர் இன்றைய தினம் வியாழன் (20.03) காலை வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தலைமையில் மன்னார் நகர சபை, நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களை மன்னார் மாவட்டச் செயலகத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கையளித்துள்ளனர்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களாட்சி முறைமை இது இந்த ஆட்சியானது மீண்டும் பலப்பட போகிறது மக்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினை ஏற்கனவே அங்கீகரித்து விட்டார்கள்.எனவே இந்த தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி கட்சியை ஆதரித்து முழுமையாக ஐந்து வருடங்களுக்கு எங்களுடைய ஆட்சியை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கு மக்கள் நிச்சயமாக தங்களது ஆதரவினை வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
வரவு செலவு திட்டத்தில் பாரிய அளவான நிதி வட மாகாணத்துக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் வட மாகாணத்துக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு வட மாகாணத்தில் பல திட்டங்களை செயற்படுத்தவுள்ளோம் .
அத்தோடு தமிழர்களுக்கு தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகள் படிப்படியாக எமது அரசாங்கத்தினால் தீர்த்து வைக்கப்படும். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.
அந்த வகையிலே இந்த முறை உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும். அதற்கான ஆதரவை முழுமையாக மக்கள் வழங்குவார்கள் எனவே ஊழலற்ற மாற்றத்துக்குட்பட்ட ஒரு சிறப்பான மக்கள் மயப்படுத்தப்பட்ட உள்ளூராட்சி அதிகாரங்களை தேசிய மக்கள் சக்தி நிச்சயமாக அமைக்கும் என்றார்.