நியூசிலாந்து மண்ணில் 16 ஓவர்களில் 205 ரன்கள் என்ற இலக்கை அதிரடியாக சேசிங் செய்த பாகிஸ்தான்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் ஹசன் நவாஸ் 44 பந்துகளில் சதம் அடித்தார். அதன் மூலம், பாகிஸ்தான் அணிக்காக அதிவேக சர்வதேச டி20 சதம் அடித்த வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை படைத்து இருக்கிறார்.
பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே டி20 தொடரில் விளையாடுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் மூன்றாவது போட்டியில் ஆடியது பாகிஸ்தான் அணி.
மூத்த வீரர்கள் ஆன முகமது ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோர் இல்லாத நிலையில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 19.5 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. மார்க் சேப்மேன் 44 பந்துகளில் 94 ரன்கள் விளாசினார். 11 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் அடித்திருந்தார். மைக்கேல் பிரேஸ்வெல் 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களை எடுத்தனர்.
பாகிஸ்தான் அணி 205 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. எப்படியும் பாகிஸ்தான் அணி இந்த இலக்கை எட்ட முடியாது என்று அனைவரும் நினைத்தனர். ஆனால், துவக்க வீரராக களம் இறங்கிய ஹசன் நவாஸ் வெறியாட்டம் ஆடினார். மறுபுறம் மற்றொரு துவக்க வீரர் முகமது ஹாரிஸ் 20 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களை அடித்திருந்தார்.
அவர் சென்ற பின் கேப்டன் சல்மான் அலி ஆகா மூன்றாம் வரிசையில் இறங்கினார். அவரும், ஹசன் நவாஸும் இணைந்து நியூசிலாந்து பந்துவீச்சை பந்தாடினார்கள். ஹசன் நவாஸ் 44 பந்துகளில் சதம் அடித்து பாகிஸ்தான் அணிக்காக அதிவேக டி20 சதத்தை கடந்தார்.
ஹசன் நவாஸ் 45 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். அவர் 10 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் அடித்தார். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். சல்மான் அலி ஆகா 31 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்தார். பாகிஸ்தான் அணி சரியாக 16 ஓவர்களில் 205 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆதிக்கம் செலுத்தி வென்றது.
பாகிஸ்தான் அணியின் இந்த மாபெரும் வெற்றி கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் நடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணிலேயே படுமோசமாக செயல்பட்டு தோல்விகளை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நியூசிலாந்து மண்ணில் 16 ஓவர்களில் 205 ரன்கள் என்ற இலக்கை அதிரடியாக சேசிங் செய்து மிரட்டி உள்ளது. 22 வயதான ஹசன் நவாஸின் இந்த ஆட்டம் பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. மேலும். முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் செய்ய முடியாததை 22 வயது வீரர் செய்துவிட்டார் என அவரை கொண்டாடி வருகின்றனர்.