ஓய்வு பெற போகிறாரா பிரதமர் மோடி: சர்ச்சையைக் கிளப்பிய சஞ்சய் ராவத்.

பிரதமர் பதவியில் இருந்து திரு மோடி விலகக்கூடும் என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் புது விவாதங்களைக் கிளப்பி உள்ளது.
பிரதமர் மோடி அண்மையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்துக்குச் சென்றிருந்தார். பிரதமர் பதவியேற்ற பிறகு கடந்த பத்து ஆண்டுகளில் அவர் அங்கு சென்றது இதுவே முதன்முறையாகும்.
பிரதமர் மோடிக்குத் தற்போது 74 வயதாகிறது. 75 வயதைக் கடந்த தலைவர்களுக்கு ஓய்வு அளிப்பது பாஜகவின் எழுதப்படாத சட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
எனவே, தாம் பதவியில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக விவாதிக்கத்தான் ஆர்எஸ்எஸ் தலைவர்களைச் சந்திக்க மோடி சென்றதாக சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
“திரு மோடிக்குப் பின்னர் பிரதமர் பதவிக்கு யார் வரவேண்டும் என்பதை ஆர்எஸ்எஸ் அமைப்புதான் முடிவு செய்யும். அநேகமாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் அப்பதவிக்கு வரக்கூடும்.
“எனக்குத் தெரிந்தவரை ஆர்எஸ்எஸ் நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை விரும்புகிறது. பிரதமர் மோடியின் பதவி நேரம் முடிந்துவிட்டது,’‘என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பு இக்கூற்றை முற்றிலுமாக மறுத்துள்ளது. “பிரதமரின் வருகை மிகவும் முக்கியமானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆர்எஸ்எஸ், பாஜக இடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. மக்கள் பலவிதமாகப் பேசுவார்கள்,” என்று அந்த அமைப்பின் நிர்வாகி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது அடிப்படை ஆதாரமற்ற தகவல் என பாஜகவும் கருத்து தெரிவித்துள்ளது.