சீருடையில் பொலிஸ் அதிகாரி, விசாரணை என்ற பெயரில் , பேருந்து நிலையத்தில் இருந்தவரிடம் பணம் அபகரிப்பு!

தென்னியாய பேருந்து நிலையத்தில் இருந்த பயணியிடம் இருந்து 21,540 ரூபாய் திருடியதாக தென்னியாய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அந்த நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவரை இரண்டு லட்சம் ரூபாய் சொந்தப் பிணையில் விடுவிக்க மொறவக்க பதில் நீதவான் அஜித் அபேசேகர உத்தரவிட்டார்.
மேலும், சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட்டை மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.
சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தென்னியாய பேருந்து நிலையத்தில் இருந்த ஒருவரை விசாரித்து சோதனை செய்துள்ளார்.
அந்த சோதனையின் பின்னர், அந்த பயணியின் சட்டைப் பையில் இருந்த பணம் காணாமல் போனதை அறிந்ததும், அந்த நபர் பொலிஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அந்த பொலிஸ் சார்ஜன்ட் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து 21,540 ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.