அவலச் சாவை நோக்கும் அகதிகள் சுவிசிலிருந்து சண் தவராஜா.

பொருளாதார சமத்துவமற்ற உலகில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்த சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு தேடி இடம்பெயர்வது காலங்காலமாக நடைபெற்று வருகின்ற ஒன்று. இந்தத் தேடலில் பலர் வசந்தத்தை காணுகின்றனர். ஒரு சிலர் அவலத்தைச் சந்திக்கின்றனர். இன்றைய உலகு விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டுள்ள போதிலும் பாதுகாப்புத் தேடி ஓடும் ஏதிலிகளின் மரணம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துச் செல்வதையே பார்க்க முடிகின்றது.

கடந்த வருடத்தில் இத்தகைய மரணங்கள் உச்சத்தைத் தொட்டுள்ளதாக புலம்பெயர்வோர் தொடர்பான பன்னாட்டு அமைப்பு (IOM) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. இடம்பெயர்வோருக்கான இத்தகைய பயணப்பாதைகளில் கடந்த வருடத்தில் மாத்திரம் 8,938 பேர் மரணத்தைத் தழுவியுள்ளனர். 2023இல் இந்த எண்ணிக்கை 8,747 ஆக இருந்தது. கடந்த ஐந்து வருடங்களில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தில் புதிய உச்சத்தைத் எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2014 முதலான பத்து வருட புள்ளிவிபரங்களின் படி 2016ஆம் ஆண்டில் புலம்பெயரும் ஏதிலிகளின் மரண எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டது. அந்த வருடத்தில் 8,288 மரணங்கள் பதிவாகி இருந்தன. அடுத்த ஆறு வருடங்களில் குறைவடைந்துவந்த இந்த எண்ணிக்கை 2023இல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த வருடத்தில் பதிவான எண்ணிக்கை புதிய சாதனையாகக் கணிக்கப்பட்டது. தற்போது கடந்த வருடத்தில் மீண்டும் அதிகரித்து உள்ளது.

ஆசியக் கண்டத்திலேயே பெருமளவான ஏதிலிகளின் மரணம் கடந்த வருடத்தில் பதிவாகி உள்ளது. 2023இல் 2,154ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2024இல் 2,778ஆக உயர்ந்தது. அதேவேளை 2016ஆம் ஆண்டில் ஆசியப் பிராந்தியத்தில் இறந்த ஏதிலிகளின் எண்ணிக்கை வெறும் 359 ஆகவே பதிவாகி இருந்தது.

மத்தியதரைக் கடல் பிராந்தியத்தில் இறக்கும் ஏதிலிகளின் எண்ணிக்கை சராசரியாக அதிகமாக இருப்பது வழக்கம். அபாயகரமான கடல் பயணங்களின் போது நிகழும் மரணங்கள் தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் அடிக்கடி வெளியாவது தெரிந்த விடயம். கடந்த வருடத்தில் இந்தப் பிராந்தியத்தில் 2,452 மரணங்கள் பதிவாகி இருந்தது. இது முன்னைய ஆண்டை விடச் சற்றுக் குறைவடைந்து உள்ளது. 2023இல் இந்த எண்ணிக்கை 3,155 ஆகப் பதிவாகி இருந்தது. அதேவேளை 2016இல் இந்தப் பிராந்தியத்தில் அதிக எண்ணிக்கையாக 5,136 மரணங்கள் பதிவாகி இருந்தன. தொடர்ச்சியாக இந்தப் பிராந்தியத்தில் மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் 2020இல் மாத்திரம் இந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது. அந்த வருடத்தில் 1,450 மரணங்கள் மாத்திரமே பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது இடத்தில் ஆபிரிக்கப் பிராந்தியம் உள்ளது. கடந்த வருடத்தில் இந்தப் பிராந்தியத்தில் 2,242 மரணங்கள் பதிவாகி உள்ளன. 2023இல் இந்த எண்ணிக்கை 1,875 ஆக இருந்தது. கடந்த பத்து வருடங்களில் இந்தப் பிராந்தியத்தில் ஓரளவு குறைவாக அவதானிக்கப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்து வருவது நோக்கத்தக்கது.

பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள அமெரிக்கப் பிராந்தியத்தில் கடந்த வருடத்தில் 1,233 மரணங்கள் இதுவரை பதிவாகி உள்ளன. இந்தப் பட்டியல் இன்னமும் முழுமை செய்யப்படவில்லை என புலம்பெயர்வோர் தொடர்பான பன்னாட்டு அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. முழுமையான பதிவுகள் வெளிவரும் போது இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கக் கூடும். இவற்றுள் 341 மரணங்கள் கரீபியன் பிராந்தியத்திலும், 174 மரணங்கள் டேரியன் இடைவெளி என அறியப்படும் கொலம்பியாவுக்கும் பனாமா நாட்டுக்கும் இடையிலான காட்டுவழியிலும் சம்பவித்துள்ளன. அதேவேளை கடந்த வருடத்தில் இந்தப் பிராந்தியத்தில் 1,405 மரணங்கள் பதிவாகி இருந்தன. கடந்த பத்து ஆண்டுகளில் ஆகக் கூடுதலாக 2022இல் 1,529 மரணங்கள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளை ஐந்து பிராந்தியங்களாக வகுத்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஆகக் குறைந்தளவான மரணங்கள் நிகழும் பிராந்தியமாக ஐரோப்பா உள்ளது. கடந்த ஆண்டில் இந்தப் பிராந்தியத்தில் 233 மரணங்கள் பதிவாகி உள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் பதிவான புள்ளிவிபரங்களின் படி இதுவே அதிக எண்ணிக்கையாக உள்ளது. 2023இல் இந்த எண்ணிக்கை 158 ஆக இருந்தது.

வன்முறை நிலவும் பிராந்தியங்களில் இருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்யும் மனிதர்களே அதிக எண்ணிக்கையில் மரணத்தைத் தழுவுகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. தங்கள் பெறுமதியான உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அபாயகரமான பயணப் பாதைகளை தேர்வு செய்ய வேண்டிய நிர்;ப்பந்தத்தில் ஏதிலிகள் உள்ளனர். பெரும் பொருட் செலவில் அவர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் அவர்கள் நினைத்தது போல் இலகுவானதாக இருப்பதில்லை. சில வேளைகளில் தங்கள் உயிர்களையே அவர்கள் இழக்க நேர்கிறது. பலர் தங்கள் பயணத்தின் போது காணாமல் போகின்றனர். அவர்களின் கதி என்னவானது என்று தெரிந்து கொள்வதற்குக் கூட வகையற்ற மனிதர்களாக அவர்களை இழந்த உறவுகள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் அவலம் உலகம் முழுவதிலும் நீடிக்கிறது.

மறுபுறம், இந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள மனிதர்கள் மாத்திரம்தான் உண்மையிலேயே புலம்பெயரும் நடைமுறையில் மரணத்தைத் தழுவியவர்கள் அல்லது காணாமல் போனவர்கள் என அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. ஆய்வுகளில் அடங்காத எத்தனையோ ஆயிரம் பேர் இந்த முயற்சிகளில் மரணத்தைத் தழுவியிருக்கக் கூடும், காணாமல் போயிருக்கக் கூடும்.

புள்ளிவிபரங்கள் கைவசம் உள்ளன, எந்தப் பிராந்தியங்களில் புலம்பெயர்வோர் அதிக எண்ணிக்கையில் மரணத்தைத் தழுவுகின்றனர் என்ற தரவுகள் கைவசம் உள்ளன. ஆனால் இத்தகைய மரணங்களைத் தடுப்பதற்கு அல்லது எண்ணிக்கையைக் குறைப்பதற்கு உலக நாடுகள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் யாவை என்ற பாரிய கேள்வி எழுகிறது. உலகம் உண்மையிலேயே இத்தகைய மரணங்களைத் தடுத்து விடுவதில் அக்கறையோடு உள்ளதா? அதற்கான செயற்திட்டங்களைக் கொண்டுள்ளதா? போன்ற துணைக் கேள்விகளும் உள்ளன.

உலக மாந்தரில் பெரும்பாலானவர்கள் போர்களை வெறுப்பவர்களாக உள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் ஆட்சியாளர்கள் பலரின் மனதில் அந்த எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் தற்போதும் உலகின் பல மூலைகளிலும் போர்கள், ஆயுத மோதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பல புதிய மோதல்கள் உருவாகும் வாய்ப்புகளும் எதிர்காலத்தில் உள்ளன. பொதுமக்களைக் காப்பதற்கான பன்னாட்டுச் சட்டங்கள் அநேகம் இருந்தாலும் அவை கண்டுகொள்ளாமல் விடப்படுவதையும் பார்க்க முடிகின்றது. எனவே பாதுகாப்புத் தேடி இடம்பெயர்வோரின் அவலம் தொடரவே போகின்றது. அபாயகரமான பயணங்களை மேற்கொண்டு தம்மைக் காத்துக் கொள்வதற்கான அவர்களின் முனைப்புகளும் நீடிக்கவே போகின்றன.

இந்நிலையில் உலக நாடுகள் இணைந்து சிறப்பான பொறிமுறை ஒன்றை வடிவமைத்துச் செயற்படுத்தினால் மாத்திரமே உயிரைக் காத்துக் கொள்வதற்காக சொந்த மண்ணை விட்டு வெளியேறும் மக்களைக் காக்க முடியும். அதுவரை, ஆண்டு தோறும் மரணத்தைத் தழுவும் ஏதிலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்க முடியாது என்பதே சகப்பான யதார்த்தம்.

‘உலகளாவிய அடிப்படையில் அதிகரித்துவரும் புலம்பெயர்வோரின் மரண எண்ணிக்கை எற்றுக் கொள்ளப்பட முடியாதது, அதேவேளை தடுக்கப்படக் கூடியது. ஒவ்வொரு இலக்கத்தின் பின்னாலும் ஒரு மனிதர் இருக்கிறார், அவரது மரணம் யாரோ ஒருவருக்கோ பலருக்கோ பேரிழப்பைத் தரவல்லது.’ என்கிறரர் புலம்பெயர்வோர் தொடர்பான பன்னாட்டு அமைப்பின் செயற்பாடுகளுக்கான துணைப் பணிப்பாளர் நாயகம் உகோச்சி டேனியல்ஸ்.

இவரது குரல் உலகின் மனசாட்சியை உலுக்குமா? எவருக்கும் விடை தெரியாத கேள்வி இது.

Leave A Reply

Your email address will not be published.