காஸாவில் உதவிக்குழு ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் காட்டும் காணொளி வெளியாகியதில் அதிர்ச்சி.

காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்து வந்த ஊழியர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதைக் காட்டும் காணொளி ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

துணை மருத்துவர் ஒருவர் அதனை தமது கைப்பேசியில் படம் பிடித்து இருந்தார்.

அவரது 14 இதர உதவிக்குழு உறுப்பினர்களும் காஸாவின் தெற்குக் கோடியில் உள்ள ராஃபா நகரில் மார்ச் இறுதிவாக்கில் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.

அந்த 15 பேரும் ரெட் கிரசென்ட், பாலஸ்தீன குடிமைத் தற்காப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்கள். அந்தக் காணொளி நியூயார்க் டைம்ஸ் ஊடகம் வசம் சென்றது.

மாண்ட ஊழியர்கள் பயணம் செய்த ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களில் அவசரநிலையை உணர்த்தும் விளக்குகள் எரிந்த நிலையில் இருப்பதையும் இஸ்ரேலிய ராணுவத்தினர் அவற்றை நோக்கிச் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதையும் அந்தக் காணொளி காட்டியது.

அந்தக் காணொளி குறித்து இஸ்ரேல் நேரடியாகக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. சுகாதார ஊழியர்களை அது வேண்டுமென்றே சுட்டுக்கொன்றது என்ற குற்றச்சாட்டுக்கும் அதில் பதிலளிக்கவில்லை.

இருப்பினும், மார்ச் 23ஆம் தேதி ரெட் கிரசென்ட் அடையாளங்களைத் தாங்கிய வாகனங்களை ராஃபாவில் தனது படையினர் வழிமறித்துச் சுட்டதாகவும் அதில் போராளிக் குழுக்களைச் சேர்ந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டதையும் இஸ்ரேலிய ராணுவம் விவரித்தது.

“ரெட் கிரசென்ட் அடையாளங்கள் இடம்பெற்றிருந்த அந்த வாகனங்களில் பயங்கரவாதிகள் இருந்தது எங்களது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று இஸ்ரேலிய ராணுவ அதிகாரி நாடவ் ஷோஷானி செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையே, பாலஸ்தீன ரெட் கிரசென்ட் சங்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) செய்தியாளர்களிடம் பேசியபோது, அந்த ஏழு நிமிடக் காணொளிப் பதிவை ஐநா பாதுகாப்பு மன்றத்திடம் ஒப்படைத்துவிட்டதாகக் கூறினர்.

முன்னதாக, இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பேசிய ஷோஷானி, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை தங்களது படையினர் நடத்துவதில்லை என்றும் விளக்குகள் எரியாமலோ அவரசநிலை சமிக்ஞை இன்றியோ செல்லும் வாகனங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவற்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.