அரசாங்கத்திற்கு TNA ஆதரவு தருவதென்பது இரட்டை நாக்கு அரசியல் – சிறிகாந்தா
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது என தமிழ் தேசிய கட்சித்தலைவர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்யை தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது TNA தயாராக இல்லை எனவும் சட்டத்தரணி சிறிகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரச மாளிகைகளில் விருந்தினர்களாக உலா வருவதற்கு மட்டுமே விரும்புகின்றார் என தெரிவித்த தமிழ் தேசிய கட்சித்தலைவர், கோட்டாபய அரசாங்கத்திற்கு TNA ஆதரவு வழங்குவதனை இரட்டை நாக்கு அரசியலாகவே தமது கட்சி கருதுவதாக சிறிகாந்தா கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் வெள்ளைவான் கடத்தல் ஆரம்பமாகும் என பிரச்சாரம் செய்த அதே தமிழ் தேசிய கூட்டமைப்பினரே இப்போது கோட்டாபய அரசுக்கு நேசக்கரம் நீட்டி வருவதாகவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கோடிட்டு காட்டியுள்ளார்.
கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் தற்பொழுது வடக்கு – கிழக்கிற்கு செயலணிகளை உருவாக்கி சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள அடித்தளமிட்டு வருகின்ற நிலையில் TNA அவரது அரசுக்கு ஆதரவு தருவதாக கூறி வருகின்றதனை தமிழ் மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டுமெனவும் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிழக்கு மாகாண செயலணியில் தமிழர்கள் உள்வாங்கப்படாததனை எதிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.