குஜராத் டைட்டன்ஸ் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடையச் செய்தது.

முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 250 ரன்கள் எடுப்போம், 300 ரன்கள் எடுப்போம் என வாயில் வடை சுட்டது. முதல் போட்டியில் மட்டுமே அதுபோல ஆடிய அந்த அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் படுமோசமாக விளையாடி இருந்தது.

தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராகவும் மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்வி அடைந்துள்ளது சன்ரைசர்ஸ் அணி. ஏற்கனவே, குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சன் மற்றும் சாய் கிஷோர் என இரண்டு தமிழக வீரர்கள் இருக்கும் நிலையில் இந்த போட்டியில் மூன்றாவதாக வாஷிங்டன் சுந்தரும் களம் இறக்கப்பட்டார்.

அவர் ஆல்ரவுண்டராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் ஒரு எதிர்பாராத ஆச்சரியம் இருந்தது.

சுந்தர் முழு நேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடினார், ஒரு ஓவர் கூட பௌலிங் செய்யவில்லை. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது அந்த அணியின் துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் முதல் ஓவரிலேயே முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முகமது சிராஜ் அடுத்து அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின் பிரசித் கிருஷ்ணா இஷான் கிஷனின் விக்கெட்டை வீழ்த்தினார். இஷான் கிஷன் 14 பந்துகளில் 17 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். நிதிஷ் குமார் ரெட்டி நீண்ட நேரம் நின்று ஆடினாலும் நிறைய பந்துகளை வீணடித்தார். அவர் 34 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் சாய் கிஷோர் வீசிய பந்தில் ரஷீத் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின் ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக ஆடினார். அவரும் சாய் கிஷோரின் பந்துவீச்சில் பவுல்ட் அவுட் ஆனார். கிளாசன் 19 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தார். அனிக்கேத் வர்மா அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 14 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் வீசிய 19வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் 5 பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்து பிரசித் கிருஷ்ணா பௌலிங்கில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் கேப்டன் பாட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி ஒன்பது பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து 150 ரன்களை எட்டுமா என்ற சந்தேகத்தில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.

முகமது சிராஜ் நான்கு ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மிகச் சிறப்பான பந்துவீச்சை அவர் பதிவு செய்து இருந்தார். பிரசித் கிருஷ்ணா நான்கு ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். சாய் கிஷோர் அபாரமாக செயல்பட்டு நான்கு ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

இந்த போட்டியில் ரஷித் கான் மற்றும் இஷாந்த் ஷர்மா மட்டுமே குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஏமாற்றம் அளித்தனர். இஷாந்த் ஷர்மா நான்கு ஓவர்களில் 53 ரன்களை வாரி இறைத்திருந்தார், ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. உலகின் சிறந்த டி20 சுழற்பந்துவீச்சாளராக அறியப்படும் ரஷீத் கான் நான்கு ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தவில்லை.

அடுத்து 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் சாய் சுதர்ஷன் இதற்கு முன் ஆடிய மூன்று போட்டிகளிலும் சிறப்பாக ரன் சேர்த்திருந்தார். ஆனால் இந்த போட்டியில் அவர் 9 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து முகமது ஷமி வீசிய அற்புதமான பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜோஸ் பட்லர், கம்மின்ஸ் வீசிய பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி 3.5 ஓவர்களில் 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்தது. அப்போது நான்காம் வரிசையில் யாரும் எதிர்பாராத வகையில் வாஷிங்டன் சுந்தர் களம் இறங்கினார். அவர் கேப்டன் சுப்மன் கில்லுடன் இணைந்து பேட்டிங் செய்தார்.

வந்தவுடன் அதிரடியை காட்டிய வாஷிங்டன் சுந்தர் சிமர்ஜித் சிங் வீசிய ஐந்தாவது ஓவரில் 20 ரன்களை விளாசி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மிரள வைத்தார். அங்கிருந்தே போட்டி குஜராத் டைட்டன்ஸ் வசமானது. அதன் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எந்தவிதமான அழுத்தத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

சுப்மன் கில் தொடர்ந்து சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடித்து வந்தார். வாஷிங்டன் சுந்தர் சரவெடியாக ஆடினார். அவர் 29 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முகமது ஷமி வீசிய பந்தில் அனிக்கேத் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார். அந்த கேட்ச் சரியாக பிடிக்கப்பட்டதா அல்லது தரையில் பட்ட பின் பிடிக்கப்பட்டதா என்பதில் சர்ச்சை நீடித்தது.

எனினும், மூன்றாம் நடுவர் அவுட் கொடுத்ததால் வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். மறுபுறம் சுப்மன் கில் கடைசி வரை நின்று பேட்டிங் செய்து அரைசதம் கடந்தார்.

வாஷிங்டன் சுந்தர் சென்றவுடன் ஐந்தாம் வரிசையில் இறங்கிய ரூதர்போர்டு அதிரடியாக ஆடினார். அவர் 16 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். சுப்மன் கில் 43 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி 16.4 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் முகமது ஷமி சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தி இருந்தார். கேப்டன் கம்மின்ஸ் 3.4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். மற்ற பவுலர்கள் யாரும் ஒரு விக்கெட் வீழ்த்தவில்லை.

சிமர்ஜித் சிங் ஒரு ஓவர் வீசி 20 ரன்களை வாரி இறைத்து மோசமான பந்துவீச்சை பதிவு செய்திருந்தார். இத்துடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தான் ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து மோசமான நிலையை எட்டி இருக்கிறது. அந்த அணி தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி தான் ஆடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.