76 வருட ஆட்சியாளர்களின் தவறுகளால்தான் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று – ஜனாதிபதி.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிதாக எதுவும் இல்லை என்று ஜனாதிபதி அனுர திசாநாயக்க தெரிவித்தார்.
ஏற்கனவே நடைபெற்று வரும் நடவடிக்கைகளுக்கு இதன் மூலம் ஒரு முறையான வடிவம் கொடுக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
காலி நகரில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இப்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றி எதுவும் இல்லை.
ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள். ஏற்கனவே கூட்டு நடவடிக்கைகள் உள்ளன. ஏற்கனவே கூட்டுப் பயிற்சிகள் உள்ளன. எங்கள் அதிகாரிகள் , இந்தியாவுக்கு சென்று பயிற்சி பெறுகிறார்கள். அதேபோல் ஏற்கனவே ஒரு கூட்டு ஆராய்ச்சி உள்ளது. அவற்றை முறைப்படுத்துவதற்காக நாங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளோம்.
இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்புத் துறையில் அதிக தொழில்நுட்ப திறன்களும் நிபுணத்துவமும் உள்ளவர்களின் உதவியைப் பெற வேண்டும். இல்லையென்றால் ஒரு நாடு எப்படி முன்னேறுவது?
76 வருடங்களாக இந்த நாட்டின் தொழில்நுட்ப அறிவியலின் வளர்ச்சியை இந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்திருந்தால், எங்களுக்கு அப்படி செல்ல வேண்டியிருந்திருக்காது.”