முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இறுதி வருட மாணவர்களுக்கான தொழிற் சந்தை.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட வளாகத்தில் நடைபெற்றது.

முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத் தொழில் வழிகாட்டல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் தொழில் வாய்ப்பு சந்தை – 2025 பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் தலைமையில் இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டு தொழிற் சந்தையைத் திறந்து வைத்தார்.

முகாமைத்துவ பீட இறுதியாண்டு மாணவர்களுக்கான தொழில் பயிற்சி வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், வங்கிகள், கணக்கியல், நிதியியல், மனிதவள, சந்தைப்படுத்தல், வணிகத் தொழிநுட்பம் , தொடர்பாடல் மற்றும் ஆடை உற்பத்திகளில் ஈடுபடும் சுமார் 30 தொழில் வழங்குநர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தமது தொழில் வாய்ப்புகள் பற்றிய அறிவைப் பெற்றுக்கொண்டதோடு, கலந்துகொண்ட தொழில் வழங்குநர்களிடம் தமது தொழில் வாய்ப்புக்கான விண்ணப்பங்களையும் சமர்ப்பித்தனர்.

இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புகள் பீடாதிபதியும், கணக்கியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியருமான தி.வேல்நம்பி, முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத் தொழில் வழிகாட்டல் அலகின் தலைவர் என். உமாகாந், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.