சிறுமி பாலியல் கொடுமை: மதரசா ஆசிரியர்க்கு 187 ஆண்டுச் சிறை.

கேரளாவில், கொவிட்-19 முடக்கநிலையின்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மதரசா ஆசிரியருக்கு 187 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தளிப்பரம்பா நீதிமன்ற நீதிபதி பி.ராஜேஷ் இந்த தீர்ப்பை வழங்கினார். ஏற்கனவே போக்சோ சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்ட உதயகிரியைச் சேர்ந்த முகம்மது ரஃபி எனும் சமய ஆசிரியர், 14 வயது சிறுமியை 2020 மார்ச் முதல் 2021 டிசம்பர் வரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டது.
சிறுமி பயம் காரணமாக வெளியில் சொல்லாத நிலையில், மதிப்பெண் குறைந்ததால் பெற்றோர் ஆலோசனை மையத்திற்கு அழைத்துச் சென்றபோது உண்மை வெளிவந்தது. காவல்துறையினர் ரஃபியை கைது செய்தனர். ஏழு குற்றச்சாட்டுகளுக்காக 187 ஆண்டுச் சிறை விதிக்கப்பட்டாலும், தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால் அவர் 50 ஆண்டுகள் சிறையில் இருப்பார் என்றும், 9 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார். ஏற்கனவே வேறொரு மதரசா வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டு பரோலில் இருந்த நிலையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.