அதிபாதுகாப்பு வலயமாக இருந்த யாழ். பலாலி வீதி 34 வருடங்களின் பின் திறப்பு

அதிபாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த பலாலி – பருத்தித்துறை சந்தி வரையிலான வீதி , 34 வருடங்களின் பின்னர் இன்று (10) பொதுமக்கள் போக்குவரத்திற்காக இராணுவத்தினரால் திறக்கப்பட்டுள்ளது.
இதன்படி யாழ்ப்பாணம் – பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள வாசவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை – பொன்னாலை சந்தி வரையிலான இரண்டரை கிலோமீட்டர் தூர வீதி இன்று காலை முதல் பொதுமக்கள் போக்குவரத்திற்காக பலாலி இராணுவ முகாமினால் திறக்கப்பட்டுள்ளது.
இந்த வீதி பலாலி இராணுவ முகாமின் அதிபாதுகாப்பு வலயம் ஊடாக மக்கள் பயணிக்கும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. வீதி திறக்கப்பட்டதன் மூலம் மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகள் மிகவும் இலகுவாகும்.
எனினும் திறக்கப்பட்டுள்ள வீதியில் பயணிக்கும் பயணிகள் பின்பற்ற வேண்டிய சுமார் 7 நிபந்தனைகளை இராணுவம் அறிவித்துள்ளது. அதன்படி,
வீதி காலை 06 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும், திறக்கப்பட்டுள்ள வீதியின் நடுவில் வாகனங்களை நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது, வீதியில் பயணிக்கும்போது இருபுறமும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது, குறித்த வீதியின் இருபுறமும் நடப்பது தடைசெய்யப்பட்டுள்ளது, பயணிகள் போக்குவரத்தைத் தவிர வேறு நடவடிக்கைகளுக்காக வீதியைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது, வீதியில் பயணிக்கும் வாகனங்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும், வீதியில் பயணிப்பவர்களின் அடையாளத்தை பாதுகாப்பு பிரிவினருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று வீதி திறக்கப்பட்டவுடன் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் வீதியைப் பயன்படுத்தி போக்குவரத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அதிபாதுகாப்பு வலயங்களுக்கு உட்பட்ட ஏனைய நிலங்களையும் இவ்வாறு விடுவிக்க பாதுகாப்பு பிரிவினர் உட்பட அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.