விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியர் கைது!

துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியர் ஒருவரை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பந்தப்பட்ட பெண் துபாயில் பணிபுரிந்த நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என்று கூறப்படுகிறது.
“ஃபிட்ஸ் எயார்” விமான சேவைக்கு சொந்தமான ஏ.டி – 822 என்ற விமானத்தில் அவர் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் பயணித்த விமானத்தில் இருந்த 35 வயதுடைய இந்தியர் ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அந்த பெண் விமான ஊழியர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அதன்பின்னர் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இந்தியரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து விமான ஊழியர்களிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணையும் , சந்தேக நபரான இந்தியரையும் , மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இந்தியர் கொழும்பு, இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.