இலங்கை மின்சார சபை, சூரிய மின்கல உற்பத்தியாளர்களிடம் வேண்டுகோள்!

நாடு முழுவதும் உள்ள கூரையின் மேல் பொருத்தப்பட்ட சூரிய மின்கலத் தொகுதி மூலமான மின் உற்பத்தியாளர்களை, ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 21 வரை, தினமும் பிற்பகல் 3.00 மணி வரை தங்களது சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புகளின் இணைப்பை துண்டித்து வைக்குமாறு இலங்கை மின்சார சபை (CEB) கேட்டுக்கொண்டுள்ளது.
நீண்ட விடுமுறை காலம் மற்றும் அதிக வெயிலுடன் கூடிய காலநிலை காரணமாக, தேசிய மின் தேவைகள் வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளன. இதன் காரணமாக, மாறும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (VRE) உற்பத்தியின் அதிகரிப்பானது தேசிய மின் கட்டமைப்பில் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், மின்சார வலையமைப்பின் உள்ளக கட்டமைப்பில் (grid inertia) ஏற்படும் திடீர் மாற்றங்களுக்குள்ளாவதன் அவதான நிலையை உருவாக்கியுள்ளது. இவ்வாறான சிறிய மாற்றங்கள் காரணமாக பகுதியளவிலோ, நாடு முழுவதிலுமோ மின்சாரத் தடையை ஏற்படுத்த காரணமாக்கலாம் என சபை விளக்கியுள்ளது.
இந்த முக்கியமான காலப்பகுதியில் தேசிய மின் வலையமைப்பின் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை பராமரிப்பதற்காக, ஒத்துழைப்பு வழங்குமாறு மின்சார சபை கேட்டுக் கொண்டுள்ளது.