ஓரே வருடத்தில் $29 பில்லியன் மதிப்பிலான ஐஃபோன்களை உற்பத்தி செய்த ஆப்பிள் இந்தியா !

ஆப்பிள் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 12 மாத காலகட்டத்தில் இந்தியாவில் 22 பில்லியன் அமெரிக்க டொலர் (S$29 பில்லியன்) மதிப்பிலான ‘ஐஃபோன்’களை உற்பத்தி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு முன்புடன் ஒப்புநோக்க, இது ஏறக்குறைய 60 விழுக்காடு கூடுதல் உற்பத்தியாகும். ஆப்பிள் நிறுவனம் , சீனாவுக்கு அப்பால் அதன் உற்பத்தி நடவடிக்கைகளைப் பன்முகப்படுத்துவதை இது காட்டுவதாகக் கருதப்படுகிறது.

ஐந்தில் ஒரு ‘ஐஃபோன்’ தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் உற்பத்தி அதிகரித்திருப்பது, ஆப்பிள் நிறுவனமும் அதன் விநியோகிப்பாளர்களும் சீனாவிற்குப் பதில் இந்தியாவை வர்த்தக மையமாக அமைத்துக்கொள்ளத் திட்டமிடுவதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பிப்ரவரி மாதம் புதிய வரிகளை விதிக்கப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்தியாவில் தயாராகும் ‘ஐஃபோன்’கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் நடவடிக்கை சூடு பிடித்தது.

ஏப்ரல் 11ஆம் திகதி, திறன்பேசிகள், கணினிகள் உள்ளிட்ட மின்னணுப் பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று டிரம்ப் ஏப்ரல் 11ஆம் தேதி அறிவித்தார். இதன்கீழ், இந்தியாவில் தயாரிக்கப்படும் ‘ஐஃபோன்’களுக்கு இப்போதைக்கு வரி ஏதும் இல்லை.

இருப்பினும், அமெரிக்காவிலேயே ‘ஐஃபோன்’களைத் தயாரிக்கும் அதிபர் டிரம்ப்பின் கனவு விரைவில் நிறைவேறும் என்று சொல்வதற்கில்லை. அமெரிக்காவில் அதற்கான வசதிகள் இல்லாதது, ஊழியர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் ஆப்பிள் நிறுவனம் இப்போதைக்கு உற்பத்தியை அமெரிக்காவுக்குக் கொண்டுசெல்லாது என்று கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.