Good Bad Ugly: விமர்சனம்..

அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, பிரபு, சுனில், ஜாக்கி ஷெராஃப், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ் இரட்டை வேடங்களில் நடித்து உருவாகியுள்ள படத்திற்கு அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் விமர்சனம் குறித்து இங்கு காணலாம்.

படத்தின் கதையை பொறுத்தவரையில், கேங்ஸ்டராக இருக்கும் அஜித் குமார், தனது மனைவி த்ரிஷா சொன்ன காரணத்திற்காக ஜெயிலில் 18 ஆண்டுகள் இருக்கிறார். தனது மகனின் 18 வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என ஜெயிலரின் உதவியுடன் முறைப்படி ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார். இந்த சமயத்தில் ஸ்பெயினில் உள்ள மகனை யாரோ கடத்தி விடுகிறார்கள். அதன் பின்னர்தான், அஜித்தின் மகனை போதைப்பொருள் வழக்கில் திட்டமிட்டு சிக்க வைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது. அஜித்தின் முன் பகையாளர்கள் தான், தனது மகனை இப்படி சிக்க வைத்துள்ளார் என த்ரிஷா கூறுகிறார். ஆனாலும் இதற்கு காரணம் யார்? அவர்களுக்கும் நமக்கும் என்ன முன்பகை என்பதைக் கண்டுபிடித்து, ஜெயிலில் அடைக்கப்பட்ட தனது மகனை மீட்டாரா என்பதுதான் மீதிக்கதை.

படத்தின் திரைக்கதையை பொறுத்தவரையில் முதல் பாதியில் பல்வேறு கோணங்களில் பயணிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது. சில காட்சிகளில் அஜித்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் காட்டுவது எடுபடவில்லை. முதல் பாதியில் உள்ள பல காட்சிகளில் இருந்த பில்டப்கள் எல்லாம் டயலாக்கில் இருக்கிறது. படம் மெல்ல மெல்ல எலிவேஷன் ஆகி ஃபுல் ஆக்‌ஷன் மோடுக்கு மாற்றியதற்கு ஆதிக்கிற்கு தனி பாராட்டுகள். குட் மோடில் இருக்கும் காட்சிகள் ரசிகர்களுக்காக அஜித் சொல்ல நினைக்கும் விஷயங்களையே டயலாக்காக வைத்துள்ளது ரசிக்க வைக்கிறது.

அதேபோல் பேட் மற்றும் அக்லி ஆகிய போர்ஷன்களில்தான் அஜித் ரசிகர்களுக்கான மொத்த ட்ரீட்டும் உள்ளது. குட் போர்ஷனில் இருந்து பேட் போர்ஷனுக்கு படம் கதை நகர்ந்து சிறிது நேரத்திலேயே ரசிகர்களுக்கான ட்ரீட் ஆரம்பிக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் எந்த அளவுக்கு வெறித்தனமான அஜித் ரசிகர் என்பதை இந்த படத்தின் மூலம் காட்டியுள்ளார். திரைக்கதையில் அவர் செய்துள்ள மேஜிக், அஜித் ரசிகர்களுக்கு விருந்து தான். அஜித்தின் பழைய படங்களில் உள்ள காட்சிகளை ரெஃபரன்ஸாக வைத்து அமைக்கப்பட்ட காட்சிகளுக்கு ரசிகர்களின் நீண்ட நாள் விரதத்திற்கு கிடைத்த பலன். இது மட்டும் இல்லாமல் உலக அளவில் கவனிக்கப்படும் சினிமா கதாபாத்திரங்களான கொரியன் டான் லீ, மணி ஹைஸ்ட் பிரஃபசர், ஜான் விக் உள்ளிட்டவற்றுடன் சொல்லப்பட்ட காட்சிகளுக்கு மாஸ் ரெஸ்பான்ஸ். ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனங்கள் அப்லாஸ்களை அள்ளுகிறது.

அஜித்தான் மொத்த கதையையும் தாங்கிப் பிடிக்கிறார் என்றாலும், சிம்ரன் வரும் காட்சிகள், அர்ஜுன் தாஸ் இரட்டை வேடங்களில் மிரட்டும் காட்சிகள், லாஃபிங் கேஸ் பயன்படுத்தி ஜாக்கி ஷெராஃப் சிரிக்கும் காட்சிகள் தரம். சுனில், த்ரிஷா, பிரபு, பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்டவர்கள் நடிப்பும் பாராட்டுக்குரியது. பேட் போர்ஷனில் அஜித்தின் மொத்த வில்லத்தனம் அதனூடே இருக்கும் நக்கல் தனமும் படத்தை உயர்த்துகிறது. ரெடின் கிங்ஸ்லி நடனமாடும் காட்சிக்கு சிரிப்பலை.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை காட்சிக்கு காட்சி நானும் படத்தில் ஒரு ஹீரோ தான் என்பதற்கான சான்று. ரெட்ரோ பாடல்களை படத்தில் வைப்பது இப்போது டிரெண்ட் ஆகிவிட்டாலும், திரைக்கதை நகர்வில் மூன்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு பலன் கிடைத்துள்ளது. க்ளைமேக்ஸ் ஃபைட்டில் ஆளுமா டோளுமா பாடல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ். ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களின் ரசிகர்களுக்கும் படத்தில் கச்சிதமாக வைக்கப்பட்டுள்ளது. இப்படியெல்லாம் அஜித் நடிப்பாரா என யோசிக்க வைக்கும் அளவிற்கு அஜித் இறங்கி சம்பவம் செய்துள்ளார். மாஸான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அஜித் நடிக்க வேண்டும் என பல நாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த படம் அசல் ட்ரீட். ஆதிக் சொன்னதைச் செய்து வென்று நிற்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.