வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் விஜய்!

வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
ஏற்கனவே திமுக மற்றும் சில அரசியல் கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், விஜய்யும் இணைந்துள்ளார். மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், மாநிலம் தழுவிய போராட்டமும் நடத்தப்பட்டது.
“இஸ்லாமிய சகோதரர்களோடு இணைந்து வக்பு உரிமைச் சட்டப் போராட்டத்தில் தவெகவும் பங்கேற்கும்” என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தமிழக சட்டப்பேரவையிலும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாஜக இந்த வழக்கு , அரசியல் ஆதாயத்துக்காக தொடுக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளது.