இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மனித நுகர்வுக்கு தகுதியற்ற 280 தொன் உப்புக்கு சீல் வைக்கப்பட்டது!

கருவாடு உலர்த்துவதற்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு மனித நுகர்வுக்கு தகுதியற்றது என்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பின் அளவு சுமார் 280 மெட்ரிக் தொன் எனவும், அவற்றுக்கு தற்போது துறைமுகத்தில் முத்திரை வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரம், உணவு பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதானகவிடம் வினவியபோது, மனித நுகர்வுக்கு தகுதியற்ற உப்பு சந்தைக்கு வர ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த உப்பை தென்னை தொழிலுக்கு வழங்கவும், உரம் தயாரிப்பதற்கு பயன்படுத்தவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சருக்கும் அறிவித்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.