மாண்டுவிட்டதாக அறிவித்த ராணுவம்; 16 ஆண்டுகள் கழித்து உயிருடன் வந்த வீரர்.

இந்திய ராணுவத்தால் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ராணுவ வீரர் ஒருவர், 16 ஆண்டுகள் கழித்து குடும்பத்தினரைக் காண வந்த சம்பவம் ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்துள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள கங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரீந்தர் சிங். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நிலையில், ராணுவம் அவர் மாண்டுவிட்டதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, அவரது மனைவிக்கு ஓய்வூதியப் பணம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பதன்கோட் நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாகி தான் உயிருடன் இருப்பதாக அறிவித்திருப்பது ராணுவ அதிகாரிகளையும் சுரீந்தர் சிங் குடும்பத்தினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அவரது மனைவி மீனா குமாரி தொடர்ந்த வரதட்சணை கொடுமை வழக்கிற்கு பயந்தே இத்தனை ஆண்டுகள் அவர் தலைமறைவாக இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.
2009ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் பழைய நினைவுகளை இழந்து விட்டதாகக் கூறிய அவர், அண்மையில், தனக்கு நினைவு திரும்பியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், 2020ம் ஆண்டே தான் பணியாற்றிய ராணுவ பிரிவினரிடம் சரணடைந்து விடலாம் என்று தான் எண்ணியதாகவும் ஆனால், கொவிட்-19 பெருந்தொற்று பரவலால் அது முடியாமல் போனதாகவும் அவர் கூறினார்.
மேலும், 2020ம் ஆண்டே தான் பணியாற்றிய ராணுவ பிரிவினரிடம் சரணடைந்து விடலாம் என்று தான் எண்ணியதாகவும் ஆனால், கொவிட்-19 பெருந்தொற்று பரவலால் அது முடியாமல் போனதாகவும் அவர் கூறினார்.